worldcup 2023 | South Africa vs Afghanistan: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 42-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இன்றையை ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை படுதோல்வி அடைய செய்ய வேண்டும். அப்படி நிகழ்ந்தால் ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: South Africa vs Afghanistan Live Score, World Cup 2023
டாஸ் வென்ற ஆப்கான் பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் 3 பவுண்டரி 1 சிக்ஸர் என அதிரடி தொடக்கம் கொடுத்த ரஹ்மானுல்லா குர்பா 25 ரன்னில் (22 பந்துகளில்) அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் சத்ரான் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 2 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு வந்த வீரர்களில் இக்ராம் அலிகில் 12 ரன்னிலும், முகமது நபி 2 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து, ரஷீத் கான் பேட்டிங் செய்ய வந்தார். ஆப்கானிஸ்தான் அணி 37.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்திருந்தபோது, 30 பந்துகளில் 14 ரன் அடித்திருந்த ரஷீத் கான் அண்டில் பெஹ்லுவேயோ பந்தில் குயிண்டன் டிகாக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, நூர் அஹமது பேட்டிங் செய்ய வந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 45.6 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்திருந்தபோது, 32 பந்துகளில் 26 ரன் அடித்திருந்த நூர் அஹமது, ஜெரால்ட் கோட்ஸீ வீசிய பந்தில் குயிண்டன் டிகாக் இடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து முஜிப் உர் ரஹ்மான் பேட்டிங் செய்ய வந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்தாலும் மறுபுறம் நிலைத்து விளையாடிய அஸ்மதுல்லா ஒமர்ஜாய் அரை சதம் அடித்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 47.4 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்திருந்தபோது, முஜிப் உர் ரஹ்மான் 8 ரன் மட்டுமே அடித்து, ஜெரால் கோட்ஸீ பந்தில், மர்க்ரம் இடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து, நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய வந்தார்.
சிறப்பாக விளையாடிய ஒமர்ஜாய் 97 ரன்கள் எடுத்தார், அவர் கடைசி ஓவரில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பந்துகள் கிடைக்கவில்லை. நவீன் உல் ஹக் 2 மட்டுமே எடுத்து, கடைசி ஓவரில் கடைசி பந்தில் ரபாடாவால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம், 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன டிகாக், டெம்பா பவுமா பேட்டிங் செய்ய களம் இறங்கினர். இருவரும் நின்று விளையாடினார்கள்.
தென் ஆப்பிரிக்க அணி 10.6 ஓவரில் 64 ரன் எடுத்திருந்தபோது, 28 பந்துகளில் 23 ரன் அடித்திருந்த டெம்பா பவுமா, முஜிப் உர் ரஹ்மான் வீசிய பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ராஸ்ஸி வேன் டெர் துஸ்ஸென் பேட்டிங் செய்ய வந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 13.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 66 ரன் எடுத்திருந்தபோது, குயிண்டன் டிகாக் 47 பந்துகளில் 41 ரன் அடித்திருந்த நிலையில், முஹம்மது நபி பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, அய்டன் மர்க்ரம் பேட்டிங் செய்ய வந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 23.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்திருந்தபோது, அய்டன் மர்க்ரம் நிதானமாக விளையாடி 32 பந்துகளில் 25 ரன் அடித்திருந்த நிலையில், ரஷீத் கான் பந்தில் நவீன் உல் ஹக் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, ஹென்ரிச் கிளாசென் பேட்டிங் செய்ய வந்தார். இவர் 10 ரன் மட்டுமே எடுத்து ரஷீத் கான் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து டேவிட் மில்லர் பேட்டிங் செய்ய வந்தார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிதானமாக பேட்டிங் செய்து வரும் ராஸ்ஸி வேன் டெர் துஸ்ஸென் அரை சதம் அடித்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்திருந்தபோது, டேவிட் மில்லர் 33 பந்துகளில் 21 ரன் அடித்திருந்த நிலையில், முஹம்மது நபி பந்தில் காட் அண்ட் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து, அண்டில் பெஹ்லுக்வேயோ பேட்டிங் செய்ய வந்தார்.
ராஸ்ஸி வேன் டெர் துஸ்ஸென் - பெஹ்லுக்வேயோ ஜோடி தென் ஆப்பிரிக்க அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. தென் ஆப்பிரிக்க அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பரபரப்பு வெற்றி பெற்றது. ராஸ்ஸி வேன் டெர் துஸ்ஸென் 76 ரன்களுடனும் - பெஹ்லுக்வேயோ 39 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக்.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அண்டில் பெஹ்லுக்வாயோ, டேவிட் மில்லர், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.