worldcup 2023 | South Africa vs netharlands: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இமாச்சல் பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: South Africa vs Netherlands Live Score, World Cup 2023
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்; நெதர்லாந்து முதலில் பேட்டிங்
தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது. இந்நிலையில், இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்தது. இதனால், ஆடுகளம் தார்பாய்களால் மூடப்பட்டது. அதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மதியம் 2:45 மணியைப் போல் டாஸ் போடப்பட்ட நிலையில், மீண்டும் மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற நிலையில், போட்டி 43 ஓவராக குறைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு தொடங்கியது.
இதனிடையே, டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களான விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடோவ்ட் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் விக்ரம்ஜித் சிங் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரிலே மேக்ஸ் ஓடோவ்ட் 18 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருடன் களத்தில் இருந்த பாஸ் டி லீடே 2 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
நெதர்லாந்து அணி 10.5 ஓவரில் 40 ரன் எடுத்திருந்தபோது, பாஸ் டி லீட் 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரபாடா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இவரையடுத்து சிப்ராண்ட் ஏஞ்சல்பிரெக்ட் பேட்டிங் செய்ய வந்தார்.
நெதர்லாந்து அணி 15.1 ஓவரில் 50 ரன் எடுத்திருந்தபோது, 12 ரன் அடித்திருந்த அக்கர்மேன் கோட்ஸீ பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இவரையடுத்து, தேஜா நிடமனுரு பேட்டிங் செய்ய வந்தார்.
நெதர்லாந்து அணி 20.2 ஓவரில் 82 ரன் எடுத்திருந்தபோது, ஏஞ்சல்பிரெக்ட் 19 ரன் எடுத்திருந்த நிலையில், லுங்கி இங்கிடி பந்தில் மார்கோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
நெதர்லாந்து அணி 26.6 ஓவரில் 112 ரன் எடுத்திருந்தபோது, 20 ரன் எடுத்திருந்த நிடமனுரு மார்கோ ஜான்சென் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரையடுத்து, லோகன் வேன் பீக் பேட்டிங் செய்ய வந்தார். இவர் 10 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், கேஷவ் மஹராஜ் பந்தில் குயிண்டன் டி காக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவைரையடுத்து, ரோலோஃப் வேன் டெர் மெர்வெ பேட்டிங் செய்ய வந்தார்.
245 ரன் இலக்கு நிர்ணயித்தது நெதர்லாந்து; முதல் விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்கா!
அதிரடியாக விளையாடிய ரோலோஃப் வான் டெர் மெர்வே 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து லுங்கி இங்கிடி பந்தில் குயிண்டன் டி காக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவரையடுத்து, வந்த ஆர்யன் தத் அதிரடியாக அடித்து ஆடினார். மறுமுனையில், சிறப்பாக விளையாடிய ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்தார்.
நெதர்லாந்து 43 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 245 ரன்கள் எடுத்தது. ஸ்காட் எட்வர்ட்ஸ் 69 பந்துகளில் 78 ரன்னுடனும் ஆர்யன் தத் 9 பந்தில் 23 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம், 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டர்கள் களம் இறங்கினர். தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் களம் இறங்கினர்.
தென் ஆப்பிரிக்க அணி 7.6 ஓவரில் 36 ரன் எடுத்திருந்தபோது, 20 ரன் அடித்திருந்த குயிண்டன் டி காக் அக்கர்மேன் பந்தில் ஸ்காட் எட்வர்ட்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவரையடுத்து, ரஸ்ஸீ வேன் டெர் துஸ்ஸென் பேட்டிங் செய்ய வந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 9.1 ஓவரில் 39 ரன் எடுத்திருந்தபோது, 16 ரன் எடுத்திருந்த டெம்பா பவுமா ரோலோஃப் வேன் டெர் மெர்வே பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரையடுத்து, ரஸ்ஸீ வேன் டெர் துஸ்ஸென் 4 ரன்னிலும், வந்த அய்டன் மர்க்ரம் 1 ரன்னிலும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்நிதானமாக விளையாடிய ஹென்ரித் கிளாசென் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், லோகன் வேன் பீக் பந்தில் விக்ரம்ஜித் சிங் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, மார்கோ ஜான்சென் 9 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், பால் வேன் மீகெரென் பந்தில் போல்டு அவுட் ஆனார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த தென் அப்பிரிக்க அணி, 42.5 ஓவரில் 207 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 38 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:-
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தட், பால் வான் மீகெரென்.
தென் ஆப்பிரிக்கா:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், லுங்கி என்கிடி, ஜெரால்ட் கோட்ஸி
டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் 102 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையையும், 134 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவையும் அடுத்தடுத்து வீழ்த்தி கம்பீரமாக வலம் வருகிறது. தற்போது நியூசிலாந்து, இந்திய அணிகளை போல் தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசிக்கும் உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்க அணி களம் இறங்குகிறது.
ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும், 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும் பணிந்தது. நெதர்லாந்து அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதிலிருந்து மீண்டு வர அந்த அணி போராடும்.
நேருக்கு நேர்
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6-ல் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் இவ்விரு அணிகள் மோதிய 3 ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்காவே வென்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.