தென்னாப்பிரிக்காவின் பவுலிங் மரண பயத்தை காட்டும்: ரோஹித் ஷர்மா

இந்த தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சு முற்றிலும் வித்தியாசமானது. நிச்சயமாக மிகவும் ஆபத்தானது

இந்த புது வருடத்தின் தொடக்கம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு நிச்சயம் சோதனை தான். தென்னாப்பிரிக்க அணியை அவர்கள் மண்ணிலேயே எதிர்த்து ஆடவிருக்கிறது இந்திய அணி. கேப்டனான பிறகு, விராட் கோலி எதிர்கொள்ளவிருக்கும் கடுமையான முதல் தொடர் இதுதான்.

மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி20 என இந்த நீண்ட தொடரில், இந்திய அணி சந்திக்க உள்ள சவால்கள் மிகக் கடுமையானது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 5ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

இந்தநிலையில், இத்தொடர் குறித்து ரோஹித் ஷர்மா பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அவர்கள் மண்ணில் எதிர்கொள்ள கடுமையாகத் தான் இருக்கும். ஆனால், இந்த தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சு முற்றிலும் வித்தியாசமானது. நிச்சயமாக மிகவும் ஆபத்தானது. அவர்களின் தாக்குதல் ஒரே பரிமாணத்தில் இருக்காது.

மோர்னே மோர்கல் மற்றும் ஸ்டெய்ன் வரவால் அந்த அணி மேலும் வலுப்பெற்றுள்ளது. உயரமான பவுலரான காகிசோ ரபாடாவின் பந்துவீச்சு மிக கடினமானது. மோர்னே மோர்கலும் அதே ரகம் தான். பழைய, புதிய என இரண்டு பந்திலும் தனது அனுபவத்தை பயன்படுத்தி அசத்தக் கூடியவர் ஸ்டெய்ன். தென்னாப்பிரிக்க சூழ்நிலைகளில் வெர்ணன் பிளாந்தர் ரொம்ப டேஞ்சரானவர். அவரது பந்தின் லென்த் துல்லியமாக இருக்கும். யாரையும் எளிதாக அடிக்க அவர் விடமாட்டார். அடுத்த ஒரு வருடத்தில் நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவாலான பவுலிங்கில் இதுதான் அதிக சவால் நிறைந்த பவுலிங் கொண்ட அணியாகும்” என்றார்.

×Close
×Close