தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற உள்ளது. இந்தியா உட்பட 7 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதனை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 28 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 29 ஆண்டுகள் கழித்து, சர்வதேச தடகள போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை இன்று மாலை நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிய தடகள கூட்டமைப்பின் தலைவர் தஹ்லான் ஜூமான் அல்-ஹமத் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகள் இன்று முதல் 13ம் தேதி வரை தினமும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
இந்த இந்தியா சார்பில் 62 பேர் பங்கேற்கும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் களமாட உள்ளார்கள். அவர்களில் வருண் ஊரி மனோகர் (100 மீ.), ஹரிஹரன் கதிரவன் (100 மீ. ஹர்டுல்ஸ்), ஆர்சி ஜிதின் அர்ஜூனன் (நீளம் தாண்டுல்), ரவி பிரகாஷ் (மும்முறை தாண்டுதல்), எஸ்.கார்த்திகேயன் (4X100 மீ. ரிலே), பிரதிக்ஷா யமுனா (நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல்), எஸ்.என்.லக்ஷன்யா (நீளம் தாண்டுதல்), கனிஸ்டா டீனா (4X100 மீ. ரிலே) ஆகியோர் ஆவர்.
இந்தியா சார்பில் களமாடும் வீரர், வீராங்கனைகளில் ஷாருக் கான் (3,000 மீ ஸ்டீபிள் சேஸ்), அனுராக் சிங் காலர், சித்தார்த் சவுத்ரி (ஷாட் எறிதல்) மற்றும் ரித்திக் (வட்டு எறிதல்), பூஜா (உயரம் தாண்டுதல்) ஆகியோர் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பாகிஸ்தான் தரப்பில் 12 பேரும், இலங்கை தரப்பில் 54 பேரும், பூடான் தரப்பில் 5 பேரும், நேபாளம் தரப்பில் 9 பேரும், வங்கதேசம் தரப்பில் 16 பேரும், மாலத்தீவுகள் தரப்பில் 15 பேரும் பங்கேற்பது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“