ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் அணி ஒன்று, டி20 போட்டியில் வெறும் 10 ரன்களில் ஆல் அவுட்டாகிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டிவிசன் அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் ( National Indigenous Cricket Championships) நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், தெற்கு ஆஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.
முதலில் தெற்கு ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. நியூ சவுத் வேல்ஸ் அணியின் ரோக்சனே வான்-வீன்(Roxsanne Van Veen) பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தெற்கு ஆஸ்திரேலியன் அணியின் வீராங்கனைகள் வரிசையாக வெளியேறினார்கள். தொடக்க வீராங்கனை ஃபெபி மான்செல்(Febi Mansell) மட்டும் தாக்குப்பிடித்து 4 ரன்கள் எடுக்க அந்த அணி 10 ரன்னில் சுருண்டது.
இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில் மற்ற ஆறு ரன்களும் ‘வைடு’ மூலமாக வந்ததுதான். பெபி-ஐத் தவிர மற்ற 10 வீராங்கனைகளும் டக் அவுட் ஆனார்கள். 10 ரன்னில் ஆட்டமிழந்தாலும் 10.2 ஓவர்கள் தாக்குப்பிடித்தது அந்த அணி.
ரோக்சனே 2 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 2.5 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
சுவாரஸ்யமான டி20 போட்டியை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், ஒரு அபாரமான காமெடி மேட்சை பார்த்து புலம்பிக் கொண்டே வெளியேறினார்கள்.