10 ரன்...! 10 டக் அவுட்...! டி20 போட்டியில் ரசிகர்களை மிரள வைத்த அணி

எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், ஒரு அபாரமான காமெடி மேட்சை பார்த்து புலம்பிக் கொண்டே வெளியேறினார்கள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் அணி ஒன்று, டி20 போட்டியில் வெறும் 10 ரன்களில் ஆல் அவுட்டாகிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டிவிசன் அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் ( National Indigenous Cricket Championships) நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், தெற்கு ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.

முதலில் தெற்கு ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. நியூ சவுத் வேல்ஸ் அணியின் ரோக்சனே வான்-வீன்(Roxsanne Van Veen) பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தெற்கு ஆஸ்திரேலியன் அணியின் வீராங்கனைகள் வரிசையாக வெளியேறினார்கள். தொடக்க வீராங்கனை ஃபெபி மான்செல்(Febi Mansell) மட்டும் தாக்குப்பிடித்து 4 ரன்கள் எடுக்க அந்த அணி 10 ரன்னில் சுருண்டது.

இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில் மற்ற ஆறு ரன்களும் ‘வைடு’ மூலமாக வந்ததுதான். பெபி-ஐத் தவிர மற்ற 10 வீராங்கனைகளும் டக் அவுட் ஆனார்கள். 10 ரன்னில் ஆட்டமிழந்தாலும் 10.2 ஓவர்கள் தாக்குப்பிடித்தது அந்த அணி.

ரோக்சனே 2 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 2.5 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

சுவாரஸ்யமான டி20 போட்டியை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், ஒரு அபாரமான காமெடி மேட்சை பார்த்து புலம்பிக் கொண்டே வெளியேறினார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close