ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் ஒரு சாதாரண அணியை கட்டமைப்பதும், அதை வைத்துக் கொண்டு எதிரணிகளுக்கு சவால் விடுவதும் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்டைல். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு, மிக பலவீனமான அணி என வர்ணிக்கப்பட்ட ராஜஸ்தான் அணி, ஷேன் வாரன் தலைமையில் கோப்பை வென்றது வரலாறு!.
அதன்பின் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும், 2013ல் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட அந்த அணியின் மூன்று வீரர்கள் மீது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததால் சர்ச்சையில் சிக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். இவ்வழக்கின் தீர்ப்பின் முடிவில் இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டதால் ராஜஸ்தான் ரசிகர்கள் நொந்தே போனார்கள்.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு வந்திருக்கும் ராஜஸ்தான் அணி, தனது அணியின் மிக முக்கியமான வீரரும், கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித்தை பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இழந்துள்ளது நிகழ்காலத்தில் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. இப்படி அடிமேல் அடி வாங்கும் ராஜஸ்தான், இத்தொடரில் எப்படி விளையாடப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், ஒரு நல்ல அணியைத் தான் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
ஸ்மித்துக்கு பதிலாக, ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டது உண்மையில் அருமையான மூவ். ஆல்- ரவுண்டர்கள் அதிகம் இருப்பது அணியின் மிகப்பெரிய பலம். நம்புங்கள், மொத்தம் 8 ஆல்-ரவுண்டர்கள் இந்த அணியில் உள்ளனர்.
உலகின் தலை சிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், தனது அடிப்படை விலையை விட 36 மடங்கு அதிகமாக, அதாவது 7.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட 8 ஆல்-ரவுண்டர்கள் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
விக்கெட் கீப்பர்களை பார்த்தல் தான் ‘தலையே சுற்றுவது போல் உள்ளது’!. இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், இங்கிலாந்தின் ‘டி வில்லியர்ஸ்’ ஜோஸ் பட்லர், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக டி20-ல் கதறவிட்ட தென்னாப்பிரிக்காவின் கிளாசீன் என மூன்று அதிரடி விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ளனர். இதில், கிளாசீன் ஸ்மித்துக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில், மிக அதிக தொகைக்கு (11.5 கோடி) ஏலம் போன இந்திய வீரர் என புகழ்பெற்ற ஜெயதேவ் உனட்கட், தவல் குல்கர்னி, பென் லாஃப்லின், இலங்கையின் சமீரா என ஒன்பது பவுலர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, மற்ற அணிகளுக்கு சவால் அளிக்கும் அணியாக ராஜஸ்தான் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பவர் ஷேன் வார்ன்!.