ஜெயதேவன்
ஓரிரு ஆட்டங்களைத் தவிர மற்ற எல்லா ஆட்டங்களிலும் சிறப்பாகவே விளையாடிய இந்திய மகளிர் அணி இறுதி ஆட்டத்திலும் நன்றாகவே ஆடியது. கடினமான சூழல்களையெல்லாம் கடந்து போராடிய அணியினர், வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் வந்தும் சிறிய பிழைகளாலும் பதற்றத்தாலும் அதைக் கைநழுவ விட்டனர்.
நல்ல மட்டையாளர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியினரை 228 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியதே பெரிய விஷயம்தான். ஒரு கட்டத்தில் 250 ரன்களுக்கு மேல் எடுக்கும் நிலையில் இங்கிலாந்து இருந்தது. இந்தியப் பந்து வீச்சாளர்களின் துல்லியமான வீச்சும் அருமையான களத் தடுப்பும் சேர்ந்து இங்கிலாந்தை முடக்கின.
அதிர்ச்சிகரமான தொடக்கம்
இலக்கைத் துரத்திய இந்தியாவுக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் பட்டையைக் கிளப்பிய ஸ்மிருதி மந்தனா, அடுத்த 6 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது மோசமான ஃபார்ம் இறுதி ஆட்டத்திலும் தொடர்ந்தது. ரன் ஏதும் எடுக்காமலேயே அவர் வெளியேறினார்.
அதன் பிறகு இந்திய மட்டையாளர்கள் மிகவும் கவனமாக ஆடத் தொடங்கினார்கள். தொடக்க ஆட்டக்காரர் பூனம் ராவத்தும் கேப்டன் மிதாலி ராஜும் இன்னிங்ஸை ஸ்திரப்படுத்தினார்கள். மிதாலி ரன் அவுட் ஆன பிறகு களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்ப்ரீத் கவுர் நிலைமையை உணர்ந்து நிதானமாகவே ஆடினார். பூனமும் இவரும் இணைந்து 95 ரன் எடுத்த நிலையில் ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழந்தார். அப்போது ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று சொல்லலாம் (100 பந்துகளில் 91 ரன் எடுக்க வேண்டிய நிலை).
ராவத்தும் (86) வேதா கிருஷ்ணமூர்த்தியும் (35) ஆட்டமிழந்த பிறகு இந்தியாவின் நிலை ஆட்டம் கண்டது. மட்டயாளர்களைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. நன்கு ஆடிக்கொண்டிருந்த வேதா மேலும் சிறிது எச்சரிக்கையைக் கையாண்டிருந்தால் இந்தியாவை அவர் கரை சேர்த்திருக்கலாம். ஆனால், அவர் தேவையற்ற ஷாட் ஒன்றை அடிக்கப்போக, பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த மட்டையாளர்கள் பதற்றம் காரணமாக ஆட்டமிழந்தார்கள். இந்தியா 9 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
வெற்றி மங்கை
இந்திய மட்டையாளர்கள் தவறு செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அன்யா ஷ்ரப்சோலின் சிறப்பான பந்து வீச்சுக்கு முழு மதிப்பெண் கொடுக்க வேண்டும். இவரது பந்து வீச்சுதான் இங்கிலாந்துக்குக் கோப்பையைப் பெற்றுத்தந்தது என்றும் சொல்லலாம். மந்தனா ரன் ஏதும் எடுக்கும் முன்பே ஆட்டமிழக்கச்செய்து இங்கிலாந்துக்குச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தார் ஷ்ரப்சோல். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராவத்தை ஆட்டமிழக்கச் செய்த இவர், வேதாவையும் வீழ்த்தினார். அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவின் மட்டையாளர்களை முடக்கினார்.
கடைசிக் கட்டத்தில் 10 ரன் எடுத்தால் வெற்றி என்னும் நிலையில் ஜென்னி குன், பூனம் யாதவ் கொடுத்த எளிதான ஒரு கேட்சைத் தவறவிட்டார். அணி முழுவதும் அதைக் கண்டு நொந்துபோன நிலையில் ஷ்ரப்சோல் அனைவரையும் ஆற்றுப்படுத்தினார். விக்கெட்டை எடுத்துவிடலாம் என்னும் நம்பிக்கையை ஊட்டினார். அடுத்த பந்திலேயே ராஜேஸ்வரி கெய்க்வாடின் ஸ்டெம்பைப் பெயர்த்து அணியை வெற்றி பெறச்செய்தார். 46 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்திய அவர் ஆட்ட நாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்தியா செய்த தவறுகள்
நல்ல ஃபார்மில் இருக்கும் தீப்தி ஷர்மாவைச் சற்றுப் பிந்தி அனுப்பியது, நன்றாக ஆடிக்கொண்டிருந்த வேதா தேவையற்ற சாகசத்தில் இறங்கியது, மிதாலியும் பாண்டேயும் ரன் அவுட் ஆனது ஆகியவற்றைத் தவிர்த்திருந்தால் இந்தியா எளிதாக வென்றிருக்கும். ஆனால், இப்படிப்பட்ட கணக்குகளைக் கிட்டத்தட்ட எல்லாப் போட்டிகளுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கலாம். பெரிய போட்டி என்று வரும்போது பதற்றமில்லாமல் ஆடுவதும் சூழலுக்கேற்ற உத்திகளைக் கையாள்வதும் அவசியம். இந்த இரண்டு விஷயங்களில் இந்தியா இன்னும் தேர்ச்சிபெற வேண்டும். ஆட்டம் கை நழுவிப் போகும் நிலையில் இருந்தபோதும் இங்கிலாந்து அணியினர் மனதைத் தளர விடாமல் தொடர்ந்து போராடியதை இங்கே குறிப்பிட வேண்டும். இறுதி ஆட்டத்தில் ஐந்து முறை பங்குபெற்றதன் அனுபவம் இங்கிலாந்துக்குக் கை கொடுத்தது என்று சொல்ல வேண்டும்.
இந்தக் கோப்பையை வென்றிருந்தால் இந்திய கேப்டன் மிதாலி ராஜின் சிறப்பான ஆட்டத்துக்கும் நேர்த்தியான தலைமைக்கும் பொருத்தமான பரிசாக அது அமைந்திருக்கும். அடுத்த உலகக் கோப்பையில் ஆட வாய்ப்பில்லை என்று அவர் சொல்லிவிட்டார். மகளிர் கிரிக்கெட் ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்திய இவருக்கு இது மிகுந்த ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆனால், அணியைக் கோப்பைக்கு மிக அருகே அழைத்து வந்ததே பெரும் சாதனைதான் என்பது மிதாலிக்குப் பெருமைதான்.
இந்தியாவின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கும் இதுதான் கடைசி உலகக் கோப்பை. உலகக் கோப்பைப் போட்டிகளில் தனது கடைசி ஆட்டத்தில் அவர் அற்புதமாகப் பந்து வீசினார். தனது முதல் ஐந்து ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து இங்கிலாந்து அணியினரைத் திணறச்செய்தார். அடுத்த ஐந்து ஓவர்களில் 14 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்து அவர்களுடைய பயணத்தை முடக்கினார்.
ஆடுகளத்தில் இவர்கள் இருவரது போராட்டம் நிறைந்த அற்புதமான பயணம் இந்தியாவில் பல பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை. மிதாலியும் ஜூலனும் இதர ஆட்டக்காரர்களும் உலகக் கோப்பையில் ஆடிய ஆட்டம் இந்திய மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும் திறன் கொண்டது. எனவே, தோல்வியால் கிடைத்த பாடங்களை மனதில் கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.