ஒடிசா மாநிலத்தில் 15-வது உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. 16 உலக நாடுகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். வரும் 29-ம் தேதி வரை புவனேஸ்வர், ரூர்கேலா உள்ளிட்ட பகுதிகளில் போட்டி நடைபெறுகிறது. ஹாக்கி போட்டிகளை காணவும், அங்குள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பை பார்வையிடவும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றார்.
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து, ஹாக்கி, தடகள மைதானம், நீச்சல் குளம் மற்றும் துப்பாக்கி சுடும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு உள் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் மற்றும் பயன்பாடு குறித்தும் அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். பின் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார். அவருடன் ஹாக்கி மைதானத்திற்கு சென்று பார்வையிட்டார்.
இந்தநிலையில், தமிழ்நாடு - ஒடிசா இடையே விளையாட்டுத்துறை தொடர்பாக பல அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை பயிற்றுவிப்பது, இரு மாநில வீரர்கள் பகிர்தல், சர்வதேச போட்டிகள் நடத்துதல், உயர்தரமான பயிற்சி நிலையங்கள், விளையாட்டு கல்விக் கூடங்கள், பாரா விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தல் உட்பட பல அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தம் தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
உதயநிதியுடன் தமிழ்நாடு விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/