Sports news in tamil: விளையாட்டு உலகமே ஆவலோடு எதிர்பார்த்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வரும் 23-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ள 26 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 5 வீரர், வீராங்கனைகளுக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் இடம் பிடித்துள்ள தனலட்சுமி, சுபா, ரேவதி ஆகிய 3 வீராங்கனைகளும் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்துக்கு தேர்வாகியுள்ளனர். ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் ஆகிய 2 வீரர்களும் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இவர்களின் தேர்வு குறித்து பேசிய தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா, "ஒலிம்பிக் போட்டிக்கு ஒரே நேரத்தில் தடகளத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 5 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், இந்த ஐவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கால் பாதிக்க உள்ள இந்த ஐவர் குறித்து இங்கு பார்க்கலாமா!
ஆரோக்ய ராஜீவ்
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள வழுதியூர் கிராமத்தை பூர்விகமாக கொண்ட ஆரோக்ய ராஜீவ் (30) ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஆசிய விளையாட்டில் 3 பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள இவர் 2-வது முறையாக ஒலிம்பிக்கில் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
நாகநாதன்
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரியும் நாகநாதன் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கபுலியபட்டியைச் சேர்ந்தவர். தொடர் முயற்சிக்கு பின் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ள இவருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்திரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனலட்சுமி
சில நாட்களுக்கு முன்னர் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற தனலட்சுமி தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார். பஞ்சாப் மாநிலம் பாட்டியலாவில் நடந்த இந்த போட்டியில் பிரபல தடகள வீராங்கனை பி.டி. உஷாவி 1998-ல் (23.30 வினாடி) படைத்த சாதனையை முறியடித்திருந்தார். இருப்பினும் பூவம்மா என்பவருக்கு தான் அணியில் இடம் கிடைத்தது. ஆனால் பூவம்மா காயம் காரணமாக விலகியதால் தனலட்சுமி அதிஷ்டம் கிட்டியுள்ளது.
தனலட்சுமி திருச்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேவதி
தெற்கு ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருபவர் தான் ரேவதி. தாய், தந்தையை இழந்த இவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். அதோடு வெறும் காலில் ஓடி பதக்கங்களை குவித்தவர் ரேவதி. இவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதற்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுபா
திருச்சி அருகே உள்ள திருவெம்பூரைச் சேர்ந்த சுபா (21) சென்னையில் பயிற்சி எடுத்து தனது திறமையை மேம்படுத்தி இன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரது தந்தை வெங்கடேசன் ஒரு கட்டிடத் தொழிலாளி ஆவார்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள இந்த 5 தமிழக வீரர், வீராங்கனைகள் இதுவரை தங்கள் முன்னால் இருந்த தடைகளை துச்சமென எண்ணியும், அவற்றை கடந்தும் இந்த இடத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்பதிக்க உள்ள இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.