SPORTS Tamil News: ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளின் 7வது சீசன் கடந்த நவம்பர் முதல் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று முன் தினம் (திங்கள் கிழமை) கோவாவில் நடைப்பெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியும் ஒரிசா எஃப்சி அணியும் மோதிக்கொண்டன. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரிசா எஃப்சி அணியை வீழ்த்தியது. இதனால் எரிச்சலடைந்த ஒரிசா எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பாக்ஸ்டர், போட்டி நேரலையில் உள்ள போது சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கூறியுள்ளார். இதையடுத்து அந்த அணியின் நிர்வாகம் அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் இறுதியில் நடுவர்களின் தீர்ப்பு பற்றி ஒரிசா எஃப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பாக்ஸ்டரிடம் நேரலையில் கேள்விகள் கேட்க்கப்பட்டது. அதற்கு அவர், "போட்டியில் சரியான முடிவுகளை வழங்கவில்லை. எங்கள் அணிக்கு இதுவரை ஒரு பெனால்டி ஷாட் கூட கிடைக்கவில்லை. எங்கள் அணி வீரர் யாரையாவது கற்பழிக்க வேண்டும் அல்லது அவரையே அவர் கற்பழித்துக் கொள்ள வேண்டும்" என்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளைக் கூறி கடிந்துள்ளார்.
இதையடுத்து அந்த அணியின் நிர்வாகம் இந்த சம்பவத்திற்காக வருந்துவதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளது. அதோடு தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பாக்ஸ்டரை அவரது பொறுப்பில் இருந்து நீக்கவுள்ளதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
"அவர் கூறியுள்ள கருத்துக்களால் முற்றிலும் வெறுப்படைகிறேன். ஒரிசா எஃப்சி அனைவருக்கும் பாதுகாப்பான ஓர் இடம். மேலும் இதுபோன்ற மோசமான குற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவது கண்டிக்கத்தக்கது. எனது சார்பாக அனைத்து கிளப்புகளிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை" என்று அந்த பதிவில் உரிமையாளர் ரோஹன் சர்மா கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பாக்ஸ்டருடான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஒரிசா எஃப்சி அணி கூறியுள்ளது. அதோடு அவருக்கு இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளுக்கு இடைக்கால தடை வழங்கும் அறிவுப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பாக்ஸ்டர் 35 ஆண்டுகாள அனுபமிக்கவர். இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா, பின்லாந்து, இங்கிலாந்தின் ஜூனியர் அணி, ஜப்பான் மற்றும் சுவீடனில் உள்ள சிறந்த கிளப்புகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளார். இந்த சீசனில் இதுவரை 14 போட்டிகளில் எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ள ஒரிசா எஃப்சி அணி, 11 அணிகள் கொண்ட ஐ.எஸ்.எல் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil