Sports News In Tamil, Rohit Sharma Arrives: ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் வெறும் 36 ரன்களில் சுருண்டு படு தோல்வியை சந்தித்தது. மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் எழுச்சி கண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்துக் கொண்டது. டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7-ல் சிட்னியில் தொடங்குகிறது. இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிட்னியில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இவர் நேற்று இந்திய அணி வீரர்களுடன் இணைந்தார். இந்திய வீரர்கள் புஜாரா, உமேஷ் யாதவ், விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் போன்றோர் வரவேற்றனர்.
"போட்டிக்கு முன்பாக அவரது உடல்தகுதி எப்படி இருக்கிறது என அணியின் மருத்துவ குழு கவனத்தில் எடுத்துக்கொள்ளும்" என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
ரோகித் சர்மா கடந்த டிசம்பர் 11 ம் தேதி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி தேர்வை மேற்கொண்டார். உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டதாக பிசிசிஐ அறிவித்தது.
ஐ.பி.எல். போட்டியின் போது ரோகித் சர்மா காயம் அடைந்திருந்தார். இதனால் அவரால் ஒரு நாள் மற்றும்டி-20 போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. சிட்னி டெஸ்டில் மயங் அகர்வாலுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகின்றது