இந்திய வீரருக்கு ஸ்கேன் பரிசோதனை
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்தது. நேற்று நடந்த 2-ஆவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இந்த போட்டியின் போது இலங்கை வீரர் லஹிரு குமாரா வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து இஷான் கிஷனின் ஹெல்மெட்டை தாக்கியது. உடனடியாக அவருக்கு மருத்துவக் குழுவினர் உதவினர்.
இந்நிலையில் தற்போது அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
அவரை தவிர இலங்கை அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் சன்டிமாலும் காயம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் எதிரான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்காக 24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இலங்கை வீர்கள் ஜெயவர்தனே , சங்ககாரா காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் அதிக 20 ஓவர் போட்டிகளில் வெற்றி:
கேப்டன் ரோகித் சாதனை
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. நேற்று நடந்த 2-ஆவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
நேற்று இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் சொந்த மண்ணில் அதிக 20 ஓவர் போட்டிகளில் வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இதுவரை சொந்த மண்ணில் 17 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தியுள்ள ரோகித் சர்மா 16 வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.
இதற்கு முன் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மற்றும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 15 வெற்றிகளை பெற்று தந்ததே சாதனையாக இருந்தது.
Ind vs SL 2nd T20 : இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா – தொடரையும் கைப்பற்றியது
டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வருகிற 4-ஆம் தேதி தொடங்குகிறது.
இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி பங்கேற்கும் 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.
இதுகுறித்து பஞ்சாப் கிரிக்கெட் சங்க பொருளாளர் ஆர்.பி.சிங்லா கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின்படி டெஸ்ட் போட்டிக்கான பணியில் ஈடுபடுபவர்களை தவிர போட்டியை நேரில் காண பொதுவான பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். மொகாலி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கொரோனா தொற்று பாதிப்புகள் இன்னும் அதிகமாக உள்ளன. எனவே நாங்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி போட்டியை நடத்துவதே நல்லது.
ஏறக்குறைய 3 ஆண்டுக்கு பிறகு மொகாலியில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் வாய்ப்பை ரசிகர்கள் தவறவிடுகிறார்கள்.
100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலியின் பேனர்கள் மைதானத்தின் சுற்றுபுறங்களில் வைக்கப்படும். அத்துடன் இந்த போட்டியின் போது விராட்கோலிக்கு பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சிங்லா.
உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய
இளம் வீராங்கனைகளுக்கு மிதாலிராஜ் அறிவுரை
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது.
இதையொட்டி, இந்திய இளம் வீராங்கனைகளுக்கு கேப்டன் மிதாலி ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி தனது முதல் லீக்கில் மார்ச் 6-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. தொடர்ந்து 6-வது முறையாக உலக கோப்பை போட்டியில் அடியெடுத்து வைக்க உள்ள இந்திய கேப்டன் மிதாலிராஜ் நேற்று காணொலி வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது மிதாலி ராஜ் கூறியதாவது:-
கடந்த ஆண்டு சில இளம் வீராங்கனைகளை அணியில் சேர்த்து நிறைய தொடர்களில் சோதித்து பார்த்தோம். அதில் பெரும்பாலானவர்கள் குறிப்பாக ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா, மேக்னா சிங், பூஜா வஸ்ட்ராகர் போன்ற வீராங்கனைகள் உயரிய அளவுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி இருக்கிறோம்.
இந்த தொடர்கள் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தது மட்டுமின்றி ஒரு கேப்டனாக எனக்கும் ஆடும் லெவன் அணிக்கு யார்-யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதையும் அடையாளம் காட்டியது.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நான் விளையாடிய விதமும், ரன் சேர்ப்பும் (3 அரைசதம் உள்பட 232 ரன்) மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே பார்மை உலக கோப்பை போட்டியிலும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நியூசிலாந்து தொடரில் சில ஆட்டங்களுக்கு தீப்தி ஷர்மா துணை கேப்டனாக இருந்தார். ஆனால் உலக கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் துணை கேப்டனாக செயல்படுவார். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக இந்தியா உள்ளது என்று மிதாலி ராஜ் தெரிவித்தார்.
புரோ ஹாக்கி லீக்: இந்தியா வெற்றி
புரோ லீக் ஹாக்கி தொடரில், இந்திய ஆடவர் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் இத்தொடரில், இந்திய அணி ஸ்பெயினை எதிர்கொண்டது.
ஸ்பெயினின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் 1-4 என இந்திய அணி பின்தங்கி இருந்தது. கடைசி கால் மணி நேரத்தில் பதிலடி கொடுத்த இந்திய அணி தொடர்ந்து 4 கோல்களை தள்ளி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
புரோ லீக் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.