தலைமை பயிற்சியாளர் ராஜிநாமா: உண்மையை உடைத்த ஆஸி. டெஸ்ட் கேப்டன்
ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தது அந்நாட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் உள்பட பல முன்னாள் வீரர்கள் ஜஸ்டின் லாங்கருக்கு ஆதரவாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பட் கம்மின்ஸ் மெளனம் கலைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் என்னை தொடர்புகொண்டு அமைதியான அறிவுரைகளை வழங்கினர். வேறு சில முன்னாள் வீரர்கள் ஊடகத்தில் வெளிப்படையாக அவர்களின் கருத்துகளை பகிர்ந்தனர்.
உங்களுடைய நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருக்கும்போது என்னுடைய நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் என்பதை முன்னாள் வீரர்களுக்கு நான் கூற விரும்புகிறேன்.
அவர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு இதுவரை நான் பொதுவெளியில் ஒரு முறை கூட கருத்து தெரிவிக்கவில்லை. நான் இந்த அறிக்கையின் வாயிலாக சில விளக்கங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
பயிற்சியாளர் ஜஸ்டினே தனது பாணி தீவிரமானது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது தீவிரமான அணுகுமுறை குறித்து வீரர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வீரர்களின் வளர்ச்சிக்கும், அணியின் சிறந்த அடித்தளத்துக்கும் எங்களுக்கு புதிய திறமைகளுடன் பயிற்சியாளர் தேவைப்படுகிறார்.
இந்த கருத்தை நாங்கள் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்திடம் தெரிவித்தோம். அவர்கள் தைரியமான முடிவை எடுத்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பட் கம்மின்ஸ்.
முன்னதாக, ஜஸ்டின் லாங்கரின் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு 2018இல் லாங்கர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்துக்காக டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டம் அது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட், டி20 உலகக் கோப்பை 2021 ஆகிய போட்டிகளில் இவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மார்ச் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும்.
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியிலும் (மார்ச் 4-8), 2-வது டெஸ்ட் கராச்சியிலும் (மார்ச் 12-16), 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் லாகூரிலும் (மார்ச் 21-25) நடக்கிறது.
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. சமீபத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தவர்கள் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர்.
அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்:
கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மைக்கேல் நேசர், ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.
டி20 மகளிர் ஆட்டம்: தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20 , 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டி20 ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக சபிநேனி மேகனா 37 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், நியூசிலாந்து பெண்கள் அணி இந்திய பெண்கள் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.
புரோ ஹாக்கி லீக் போட்டி:
இந்தியா வெற்றி
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற புரோ ஹாக்கி லீக் போட்டியில் தனது முதல் கட்ட லீக் ஆட்டத்தில் பிரான்ஸை 0-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி தொடர் பவ்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி, தனது முதல் கட்ட லீக் ஆட்டங்களில் பிரான்ஸ், தென்ஆப்பிரிக்காவை 2 முறை சந்திக்கிறது. இந்த ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடக்கிறது.
தனது முதலாவது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 13-வது இடத்தில் உள்ள பிரான்சை சந்தித்தது.
21 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன் ப்ரீத் முதல் கோலை பதிவு செய்தார்.
இதேபோல் 24ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி குமார் வருண் கோல் பதிவு செய்தார்.
ஷாம்ஷெர் சிங், மண்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோரும் தலா 1 கோலை பதிவு செய்தனர்.
இரு அணிகளும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆட்டத்தில் தான் முதல்முறையாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் தரவரிசை:
ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸி. ஆதிக்கம்
ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முதலிடத்தில் உள்ளனர். இந்த தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரண்டு இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். கேப்டன் மிதாலி ராஜ் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி முதல் இடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜூலன் கோஸ்வாமி இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசென் முதலிடத்திலும் நீடிக்கின்றனர்.
ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் எல்லைஸ் பெர்ரி முதல் இடத்திலும், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நான்காவது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி பத்தாவது இடத்தில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.