ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி: முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டம் வென்ற அணி
33-ஆவது ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி கேமரூன் நாட்டில் நடந்தது. 2 ஆண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் செனகல்-எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பான இந்த போட்டியில் வழக்கமான ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிட கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் செனகல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்தியது. 2002-ம் ஆண்டு கேமரூனிடமும், 2019-ம் ஆண்டு அல்ஜீரியாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்ட செனகல் அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை: 5 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது.
இதில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய 7 இடங்களில் இந்த ஆட்டங்கள் விளையாடப்பட உள்ளன.
2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெறவுள்ளது.
இரண்டு போட்டி நாட்களுக்கான டிக்கெட் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன.
அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் ஆட்டம் மற்றும் அக்டோபர் 27 அன்று சிட்னியில் தென்னாப்பிரிக்கா-வங்கதேசம் மற்றும் இந்தியா -குரூப் ஏ ரன்னர்-அப் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 5 நிமிடங்களில் விற்பனை செய்யபட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 45 போட்டிகளின் முன் விற்பனையில் மட்டும் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இப்போட்டிகளை காண 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ரோஹித் சர்மா
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தனது 1,000-வது ஒருநாள் போட்டியில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அசத்தியது.
இந்த ஆட்டத்தில் 2 பவுண்டரி விளாசி 8 ரன்கள் எடுத்த விராட்கோலி சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். உள்ளூரில் இதுவரை ஒருநாள் போட்டியில் 5,002 ரன்கள் எடுத்து இருக்கும் விராட்கோலி 5 ஆயிரம் ரன் மைக்கல்லை தனது 96-வது இன்னிங்சில் கடந்துள்ளார். இதற்கு முன்பு இந்திய ஜாம்பவான் தெண்டுல்கர் 121 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிப்பிடித்ததே சாதனையாக இருந்தது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘நாங்கள் ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஒட்டுமொத்தத்தில் இந்த ஆட்டத்தில் நமது அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினர்’என்றார்.
பெய்ஜிங் ஒலிம்பிக்: வீரர்களுக்கு பணிவிடை செய்யும் ரோபோக்கள்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன.
பீஜிங் நகரவாசிகளிடமிருந்து கொரோனா தொற்று ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக சீன அரசு பல்வேறு நடவடிகைக்களை எடுத்துள்ளது. வீரர்கள் அனைவரும் பயோ பபிள் எனப்படும் தனிமைப்படுத்தலில் தங்கியிருக்கிறார்கள்.
அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பணிவிடை செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த ரோபோக்கள், வீரர்களுக்கு காதில் மாட்டி பாட்டு கேட்கும் இயர்பாட்கள், உணவு உள்ளிட்ட பல பணிவிடைகளை செய்கின்றன.
கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க ஓட்டல் ஊழியர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வீரர்கள் தங்கள் அறைகளில் இருந்து கொண்டே உணவை ஆர்டர் செய்யும் வசதி உள்ளது. அந்த ஆர்டரையும் ரோபோக்களே எடுத்து வந்து தருகின்றன.
ரஞ்சிக் கோப்பை தொடர்: ஹார்திக் பாண்டியா விலகல்
ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா விலகினார்
2018 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத ஹார்திக், முதுகுப் பகுதி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்தார்.
அதன் பிறகு இவர் பந்துவீசாமல் இருந்து வந்தார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
காயத்திலிருந்து மீண்ட ஹார்த்திக் ரஞ்சி தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்ப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.
பிப்ரவரி 10 ம் தேதி முதல் மார்ச் 16 வரை ரஞ்சி தொடர் நடைபெறவுள்ளது.
ஆனால், இந்தத் தொடரில் ஹார்திக் பாண்டியே பங்கேற்காமல் விலகிவிட்டார்.
ஐபிஎல் சீசனில் புதிதாக அறிமுகமாகவுள்ள அகமதாபாத் அணிக்கு ஹார்திக் கேப்டனாக செயல்பட உள்ளதால் ரஞ்சித் தொடரை அவர் கைவிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.