ஐபிஎல் ஏலம்: எந்த அணியும் கண்டுகொள்ளாத 2 கேப்டன்கள்
ஐபிஎல் திருவிழா மார்ச் 27-ஆம் தேதி தொடங்குகிறது. கிரிக்கெட்டின் புது வடிவாக தொடங்கப்பட்ட ஐபிஎல் மூலம் பல இளைஞர்களின் திறமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வெளிநாட்டு வீரர்களுடன் சேர்ந்து விளையாடுவதால் பல்வேறு ஆட்ட நுணுக்கங்களை நமது வீரர்களால் கற்றுக் கொள்ள முடிகிறது.
இந்த ஐபிஎல் போட்டிக்கான இரண்டு நாள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்தது.
2-வது நாளில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஆகியோரை யாருமே ஏலத்தில் வாங்கவில்லை.
மேலும், டேவிட் மலான், லபுஸ்சேன், கேன் ரிச்சர்ட்சன், இந்தியாவின் புஜாரா, இஷாந்த் ஷர்மா, பியூஸ் சாவ்லா உள்ளிட்டோரையும் யாரும் ஏலத்தில் வாங்கவில்லை.
புரோ ஹாக்கி லீக்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
9 அணிகள் இடையிலான 3-ஆவது புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை நேற்று சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் அசத்தலாக விளையாடிய இந்தியா, 10 கோல்களைப் பதிவு செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 4 கோல்களைப் பதிவு செய்தார். ஆட்டநாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 10-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன், முந்தைய ஆட்டத்தில் (0-5) கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.
ஐஎஸ்எல்: மும்பை சிட்டி அணி வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் (ஐஎஸ்எல்) நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஒடிசா அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அணி தன்னுடைய 7-வது வெற்றியை பெற்றது.
இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி சார்பில் இகோர் அங்குலோ, பிபின் சிங் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். மேலும் ஒடிசா அணி சார்பில் ஜோனதாஸ் டி ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து மும்பை சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.
2-ஆவது டி20 ஆட்டம்: இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி கண்டது.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 ஆட்டமானது இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பின்ச் 25 ரன்கள் எடுத்தார்.
அதிகபட்சமாக ஜோஸ் இன்ங்லிஸ் 48 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல், ஸ்மித், ஸ்டோஸ்னிஸ் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது.
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தாலும் எப்படியோ 8 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது இலங்கை.
இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி, ஹேசில்வுட்டின் அருமையான பந்துவீச்சால் 5 ரன்களே திரட்டியது. பின்னர் ஆஸ்திரேலிய அணி இலங்கை நிர்ணயித்த எளிதான இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்; ரஷிய அணி தங்கம் வென்றது
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று நடைபெற்ற 4*10 கி.மீ தூர ரிலே விளையாட்டில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டி அணி 1 நிமிடம் 7.2 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தது.
அதற்கு அடுத்த இடத்தை நார்வே அணி பிடித்தது. அதனை தொடர்ந்து பிரான்ஸ் அணி மூன்றாம் இடம்பிடித்தது.
போட்டி நடைபெறும் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக போட்டியை பார்வையாளர்கள் கண்டுகளிக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மைதானத்தின் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், ஆரம்பம் முதலே ரஷிய அணி வீரர்கள் முன்னணியில் இருந்தனர். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ரிலே விளையாட்டில் ரஷிய அணி வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த நிலையில் இம்முறை தங்கம் வென்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.