19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியா் அணியில் இடம் பெற்றிருந்தவர் ஆல்-ரவுண்டர் ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர்.
மும்பையை சேர்ந்த இவர் வயது மோசடியில் ஈடுபட்டதாக மகாராஷ்டிர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா குற்றம் சாட்டியுள்ளார்.
ஹேங்கர்கேகர் 8-ம் வகுப்பில் மீண்டும் சேர்ந்த போது பிறந்த தேதியை ஜனவரி 10, 2001-க்கு பதிலாக நவம்பர் 10, 2002 என்று மாற்றியுள்ளார்.
இந்த வயது குறைப்பால் தான் அவரால் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் விளையாட முடிந்ததாக புகார் எழுந்துள்ளது.
சர்ச்சையில் சிக்கியுள்ள ஹேங்கர்கேகரை சமீபத்தில் ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.50 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதேபோன்ற குற்றச்சாட்டில் காஷ்மீரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரஷீக் சலாம் தர் சிக்கினார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் 2 வருடம் கிரிக்கெட் விளையாட பிசிசிஐயால் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள இளம் வீரர் ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர் மோசடி செய்தாரா இல்லையா என்பது பிசிசிஐயின் விசாரணைக்கு பின் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக ஆட்டத்தில் சதமடித்து அதிரடி… ரஞ்சி தொடரில் கலக்கும் இளம் இந்திய வீரர்!
நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி
ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சியை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கோவாவில் நடந்து வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு அரங்கேறிய 94-வது லீக் ஆட்டத்தில்,
நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் வீரர்கள் 74 ஆவது நிமிடத்திலும் 80 ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்களை பதிவு செய்தனர்.
முதல் கோலை பெங்களூரு அணி பதிவு செய்த போதிலும் அந்த அணியால் அதன் பிறகு எந்தவொரு கோலையும் பதிவு செய்ய இயலவில்லை. இதனால், அந்த அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
இன்றைய ஆட்டங்களில் கேரளா பிளாஸ்டர்ஸ்- ஏ.டி.கே.மோகன் பகான் (இரவு 7.30 மணி), ஐதராபாத்-கோவா (இரவு 9.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
ஆசிய பேட்மிண்டன் போட்டி: வெளியேறியது இந்தியா
ஆசிய டீம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.
இதில் ஆடவர் பிரிவில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்தித்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியை தழுவியது.
இந்திய அணியில் லக்ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஒற்றையர் பிரிவில் வெற்றி கண்டனர்.
கிரண் ஜார்ஜ் (ஒற்றையர்), ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் குமார், மஞ்சித் கவாய்ராக்பாம்- கோந்துஜாம் (இரட்டையர் பிரிவு) ஆகியோர் தோல்வியை சந்தித்தனர்.
ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
மகளிர் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 1-4 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானிடம் தோற்றது. இந்திய அணியில் அஷ்மிதா சாலிஹா (ஒற்றையர் பிரிவு) மட்டும் வெற்றி பெற்றார். மற்ற வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்தனர். தனது 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட இந்தியா லீக் சுற்றுடன் நடையை கட்டியது.
இலங்கையை பந்தாடியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கை அணை 5 டி20 ஆட்டங்கள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 3 டி20 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற 4-ஆவது டி20 ஆட்டத்திலும் இலங்கையை வீழ்த்தியது வெற்றிப் பயணத்தை ஆஸி. தொடர்கிறது.
மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஸி.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் நிசான்கா 46 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது.
கிளென் மேக்ஸ்வெல் 48 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு விரைந்து அழைத்துச் சென்றார்.
லஹிரு குமரா இலங்கை சார்பில் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இரு அணிகளுக்கு இடையிலான 5-ஆவது டி20 கிரிக்கெட் ஞாயிற்றுக்கிழமை (பிப்.20) நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் நியூசி. வெற்றி
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வந்தது. இந்த ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசி. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.2 ஓவர்களுக்கு வெறும் 95 ரன்களே எடுத்தது தென்னாப்பிரிக்கா.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-ஆவது நாளான இன்று 482 ரன்கள் சேர்த்தது.
387 ரன்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி தென்னாப்பிரிக்கா விளையாடத் தொடங்கியது.
2-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்து 353 ரன்கள் பின்னலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா.
இந்நிலையில், 3ஆவது நாள் ஆட்டத்தில் அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
41.4 ஓவர்களில் 110 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்திடம் சரணடைந்தது தென்னாப்பிரிக்கா.
டிம் சவுதீ அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை சுருட்டினார். மாட் ஹென்றி, நீல் வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைல் ஜெமீசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.