பாக். கேப்டனின் குழந்தையை கொஞ்சும் இந்திய வீராங்கனைகள்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூபின் 7 மாத குழந்தையை சந்திக்க சென்றனர். அவர்கள் அக்குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தனர்.
அவர்கள் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப்பின் பெண் குழந்தையுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படமும், வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
This video ..
— DhrubaJyot Nath 🇮🇳 (@Dhrubayogi) March 6, 2022
🇮🇳🙌🏻🇵🇰#INDvPAK #INDvSL #PAKvIND #PAKvAUS#CWC22 #Peshawarblast pic.twitter.com/VuoCOGyzKW
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு வெற்றி
மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 5 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து- வங்கதேச அணிகள் மோதி வருகின்றன. மழையின் காரணமாக ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸி., 205 ரன்கள் பின்னிலை
பாகிஸ்தானில் பல ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. மொத்தம் 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
4-ஆவது நாளான இன்று மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து 205 ரன்கள் பின்னிலையில் உள்ளது ஆஸ்திரேலியா.
உஸ்மான் கவாஜா 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 68 ரன்கள் எடுத்தார்.
ஐ.எஸ்.எல் கால்பந்து: அரையிறுதியில் கேரளா பிளாஸ்டர்ஸ்
8-ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அரைஇறுதிக்கு முன்னேறியது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான்-ஜாம்ஷெட்பூர் அணிகள் சந்திக்கின்றன.
இதையும் படியுங்கள்: IPL Full Schedule: ஐ.பி.எல் தேதி அறிவிப்பு; முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே- கொல்கத்தா மோதல்
ஜடேஜா டிக்ளேர் முடிவு பாராட்டுக்குரியது: ரோஹித் சர்மா பாராட்டு
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “உண்மையில் கூற வேண்டுமானால் இந்த போட்டி 3 நாட்களில் முடியும் என நான் நினைத்து பார்க்கவில்லை. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
விராட் கோலிக்கு இது 100-வது ஆட்டம் என்பதால் நிச்சயமாக இந்த போட்டியை வெல்ல வேண்டும் என நினைத்தோம். அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.குறிப்பாக ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார். அவர் 175 ரன்களில் இருந்த போது டிக்ளேர் செய்யும் முடிவை அணியுடன் சேர்த்து அவரும் அறிவிக்க விரும்பினார். இது அவர் சுயநலமற்றவர் என்பதை காட்டுகிறது ” என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“