தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட வார்னே உடல்
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் தாய்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனி விமானத்தில் புறப்பட்டது.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் அவரது உடல், இன்று அதிகாலை பாங்காக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்றடைந்ததும், வார்னேவின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிசடங்குகளை செய்ய உள்ளனர்.
அதைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்க விக்டோரியா மாகாண அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் பங்கேற்கவில்லை
செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாயில், இந்தியன் வெல்ஸில் விளையாடுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரின் பெயர் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி மெயின் டிராவில் இடம் பெற்றது, இது அவரது ரசிகர்களுக்கிடையே குழப்பத்திற்கு வழிவகுத்தது.
தற்போது இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜோகோவிச் ஐந்து முறை இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம்: சச்சின் வரவேற்பு
சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மன்கட் முறையில் ரன்-அவுட் என்று அழைக்கப்படுவதை நான் எப்போதும் அசவுகரியமாகவே உணர்ந்தேன். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பொறுத்தவரை அது எப்போதுமே ரன்-அவுட் தான். எனவே இது எல்லோருக்கும் நல்ல செய்தி’ என்று தெரிவித்தார்.
மைதானத்திலும் சேட்டையை காட்டிய வார்னர்… பஞ்சாபி ஸ்டைலில் நடனம்… வைரல் வீடியோ!
இதே போல் ஒரு பேட்ஸ்மேன் ‘கேட்ச்’ ஆகும் போது, அடுத்து இறங்கும் வீரர் தான் பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் நியாயமான விதி முறையாகும். ஏனெனில் ஒரு பவுலர் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்துவதற்கு நியாயமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், புதிய பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுவதே சரியானது’ என்றும் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
Cricket is a beautiful sport. It allows us to challenge existing norms and help refine laws of the game. Some of the changes introduced by MCC are praiseworthy.#CricketTwitter pic.twitter.com/bet0pakGQM
— Sachin Tendulkar (@sachin_rt) March 9, 2022
பிப்ரவரிக்கான ஐ.சி.சி. விருது பட்டியலில் மிதாலி ராஜ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதத்துக்கான (பிப்ரவரி) சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர், ஐக்கிய அரபு அமீரக பேட்ஸ்மேன் விருத்தியா அரவிந்த், நேபாள அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலி கெர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து தலா ஒருவர் சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. யின் அங்கீகாரம் பெற்ற வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஷாகிப் அல் ஹசன் ஏப்.30 வரை ஓய்வு: வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி
வங்காளதேச அணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்களாதேச அணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விளையாடாமல் ஓய்வில் இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால், வரும் மார்ச் 12 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷாகிப் “உடல் மற்றும் மன நிலை” காரணமாக ஒரு இடைவெளி எடுப்பதாகக் கூறினார்.
சில வாரங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்திலும் ஆல்ரவுண்டர் ஷாகிப்பை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil