scorecardresearch

பிரக்ஞானந்தாவுக்கு குவியும் பாராட்டுகள்.. ரியோ ஓபன் டென்னிஸ் அப்டேட்.. மேலும் செய்திகள்

செஸ் பயணத்தில் பல வெற்றிகளை பெற உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவை பெருமைப்படச் செய்துள்ளீர்கள் என்று வாழ்த்தினார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்.

மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-ஆவது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். 

இந்நிலையில் உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய  பிரக்ஞானந்தாவுக்கு முதல்- அமைச்சர் மு,க,ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘’உலகின் சிறந்த  செஸ் ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் வாழ்த்து: இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக அளவில் நம்பர் 1 சதுரங்க வீரரை வீழ்த்திய 16 வயது சென்னை சிறுவன்

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,பிரக்ஞானந்தாவுக்கு என்னவொரு அற்புதமான உணர்வாக இருக்கும். 16 வயதில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியதும் அதுவும் கருப்பு காயை கொண்டு விளையாடி வீழ்த்தியது என்பது மாயாஜாலம் தான். செஸ் பயணத்தில் பல வெற்றிகளை பெற உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவை பெருமைப்படச் செய்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ்.எல்.: ஒடிஸாவை வீழ்த்தியது பெங்களூரு

கோவாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸாவை 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்.சி அணி வீழ்த்தியது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

ஆட்டம் தொடங்கியதும் ஒடிஸா அணியின் கட்டுப்பாட்டில் கால்பந்து இருந்தது. 8ஆவது நிமிடத்திலேயே அந்த அணியின் வீரர் நந்த குமார் முதல் கோல் பதிவு செய்தார்.

இதையடுத்து தனது கட்டுப்பாட்டுக்கு ஆட்டத்தை கொண்டுவந்த பெங்களூரு 31ஆவது நிமிடத்தில் முதல் கோலையும் 49 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் பதிவு செய்தது.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யாததால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு வென்றது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன 

மும்பை அணி விளையாடிய 16 போட்டிகளில்  7 வெற்றி ,4 டிரா ,5  தோல்வி என புள்ளி பட்டியயலில் 6 வது இடத்தில் உள்ளது .ஈஸ்ட் பெங்கால் அணி விளையாடிய 17 போட்டிகளில் 1 வெற்றி ,7 டிரா ,9 தோல்வி என புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ரியோ ஓபன் டென்னிஸ்ஸ்பெயின் வீரர் அல்கராஸ் சாம்பியன்

ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேனை எதிர்கொண்ட அல்கராஸ், 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

18 வயதான கார்லோஸ் அல்கராஸ்,இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் சோரெஸ் (பிரேசில்)- முர்ரே (பிரிட்டன்) இணையை 1-5, 6-7, 10-6 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி வீழ்த்தி இத்தாலி இணையான ஃபோகினினி-போலேல்லி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்:

இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

18 பேர் கொண்ட அணியில் புதுமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் ஆஷியன் டேனியல் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய 20 ஓவர் தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வி கண்ட இலங்கை அணியில் இடம் பெற்று இருந்த பேட்ஸ்மேன் அவிஷ்கா பெர்னாண்டோ, வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷரா, சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். முழு உடல் தகுதியுடன் இல்லாததால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பனுகா ராஜபக்சே ஓரங்கட்டப்பட்டுள்ளார். 

இலங்கை 20 ஓவர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மென்டிஸ், அசலன்கா (துணை கேப்டன்), தினேஷ் சன்டிமால், தனுஷ்கா குணதிலகா, கமில் மிஷரா, ஜெனீத் லியானேஜ், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹிரு குமரா, பினுரா பெர்னாண்டோ, ஷிரன் பெர்னாண்டோ, மகேஷ் தீக்‌ஷனா, ஜெப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, ஆஷியன் டேனியல்.

சஹா சர்ச்சை கருத்து: பிசிசிஐ பொருளாளர் கருத்து

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சாஹா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார்.

அணியில் தேர்வு செய்யப்படாததற்கு ராகுல் டிராவிட்டை குற்றம்சாட்டினார். தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தினார் என்று சஹா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சஹாவின் சர்ச்சை கருத்து குறித்து பிசிசிஐ பொருளாளர் அருன் துமல் கூறியதாவது:

ரித்திமான் சஹாவின் டுவீட் குறித்தும், நடந்த உண்மை சம்பவம் என்னவென்றும் அவரிடம் கேட்போம். அவர் மிரட்டப்பட்டாரா என்பதும், அவரது டுவீட்டின் பின்னணி மற்றும் சூழல் என்ன என்பதும் எங்களுக்குத் தெரிய வேண்டும். இதுகுறித்து  செயலாளர் (ஜெய் ஷா) நிச்சயமாக ரித்திமானிடம் பேசுவார் என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Sports round up sports news in tamil important news in sports415033