Advertisment

ரியோ ஓபன் டென்னிஸ், ஐ.எஸ்.எல் அப்டேட்.. மேலும் விளையாட்டுச் செய்திகள்

பிரேசிலில் நடைபெற்றுவரும் ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காராஸ் கார்ஃபியா நுழைந்தார்.

author-image
WebDesk
New Update
ரியோ ஓபன் டென்னிஸ், ஐ.எஸ்.எல் அப்டேட்.. மேலும் விளையாட்டுச் செய்திகள்

இலங்கை-ஆஸ்திரேலியா இடையே இன்று கடைசி டி20 கிரிக்கெட்

Advertisment

இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 4 டி20 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையிலும், இரண்டாவது டி20 ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையிலும் ஆஸ்திரேலியா வென்றது.

இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றி கண்டது.

4 ஆவது ஆட்டத்திலும் அதே 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் 5ஆவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலியா.

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட்:

இந்திய அணியில் இடம்பிடித்த முக்கிய வீரர்கள்

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியில் இருந்து ரஹானே, புஜாரா நீக்கப்பட்டனர். காயத்தில் இருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பினர்.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதியில் இருந்து இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி லக்னோவில் வருகிற 24-ந் தேதியும், 2-ஆவது, 3-ஆவது 20 ஓவர் போட்டிகள் தரம்சாலாவில் முறையே 26, 27-ஆம் தேதியும் நடக்கிறது.

இலங்கைக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவர் இனிமேல் மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்துவார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த பும்ரா அணிக்கு திரும்பி இருப்பதுடன் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

காயம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு அணியில் இடம் பெறாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முழு உடல் தகுதியை எட்டியதால் இந்திய 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பி இருக்கிறார்.

இதேபோல் காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு மறுபடியும் 20 ஓவர் அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.

20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விராட்கோலி, ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு 20 ஓவர் தொடரில் இருந்து மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆல்-ரவுண்டர் ஹார்த்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து முழுமையாக தேறாததால் அவரது பெயர் கருத்தில் கொள்ளப்படவில்லை.

சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேலின் காயம் குணமடையாததால் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார் புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய 20 ஓவர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான்.

இந்திய டெஸ்ட் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங் பன்சால், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, சுப்மான் கில், ரிஷாப் பண்ட், கே.எஸ்.பரத், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.

ஐஎஸ்எல்: கேரளா -மோகன் பகான் அணிகள் ஆட்டம் 'டிரா'

கேரளா-மோகன் பாகன் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், கேரளா-மேகான் பகான் அணிகள் நேற்று மோதின.

இரு அணிகளும் தலா 2 கோல்களை பதிவு செய்தன.

இதனிடையே, ஹைதராபாத்-கோவா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 கோல் கணக்கில் ஹைதராபாத் வென்றது.

ரோஹித் சர்மா நாட்டின் நம்பர் 1 கிரிக்கெட் வீரர்:

அணி தேர்வாளர் சேத்தன் சர்மா

ரோஹித் சர்மா நாட்டின் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று அணி தேர்வாளர் சேத்தன் சர்மா தெரிவித்தார்.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து இலங்கை அணியுடன் 3 டி20 மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 

இந்த தொடர்களுக்கு ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார்.

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவித்தவுடன் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தேவைப்படும்போது ஓய்வு கொடுப்போம். அவர்களுக்கு சரியான ஓய்வு கொடுக்க விரும்புகிறோம்.

ரோகித் சர்மாவைப் பொறுத்த வரையில், அவர் நம் நாட்டின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர். அவர் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறார். தற்போது வரை சிறந்த உடல் தகுதியுடன் இருக்கிறார். 

அவரை கேப்டனாக நியமித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு கீழ் வருங்கால கேப்டன்களை நாங்கள் உருவாக்குவோம். அனைத்தும் நல்லமுறையில் நடக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

2வது போட்டியில் அரைசதம், 3வது போட்டியில் ஓய்வு; பண்ட்- கோலி திடீர் முடிவை அறிவித்த பிசிசிஐ!

ரியோ ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர்

பிரேசிலில் நடைபெற்றுவரும் ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காராஸ் கார்ஃபியா நுழைந்தார்.

இவர் போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள அர்ஜென்டீனா வீரர் டியாகோவை நாளை சந்திக்கிறார்.

முன்னதாக, இன்று நடைபெற்ற காலிறுதியில் சக நாட்டு வீரரான ஃபிரான்சிஸ்கோவை வீழ்த்தினார் டியாகோ.

மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் மாட்டியோ பெர்ரெட்டினியை ஸ்பெயின் வீரர் அல்காராஸ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். நாளை (பிப்.21) நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Tamil Sports Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment