Squash World Cup 2023 Tamil News: 4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் 8 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
Advertisment
இந்நிலையில், 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜப்பான் அணி 3-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை தனதாக்கியது. இதே போல் முதல் நிலை அணியான எகிப்து 4-0 என்ற கணக்கில் கொலம்பியாவையும், மலேசியா அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும் துவம்சம் செய்தது. ஜப்பான், எகிப்து, மலேசியா அணிகள் அரைஇறுதியை உறுதி செய்தது.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை முழுமையாக வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்து அரைஇறுதியை எட்டியது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 7-4, 7-2, 3-7, 7-2 என்ற செட் கணக்கில் ஹெய்லி வார்டையும் (தென்ஆப்பிரிக்கா), இந்திய வீரர் சவுரவ் கோஷல் 7-6, 7-4, 7-1 என்ற நேர்செட்டில் டிவால்ட் வான் நிகெர்க்கையும், ஜோஸ்னா சின்னப்பா 7-4, 7-3, 3-7, 7-1 என்ற செட் கணக்கில் லிஜெலி முல்லரையும், அபய் சிங் 7-4, 3-7, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் ஜீயன் பியர் பிரிட்சையும் தோற்கடித்தனர். இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வென்று இருந்தது.
இன்று நடைபெறும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-கொலம்பியா (காலை 10.30 மணி), ஹாங்காங்-தென்ஆப்பிரிக்கா (பகல் 1 மணி), எகிப்து-மலேசியா (மாலை 3.30 மணி), இந்தியா-ஜப்பான் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil