Sreesanth abused Rahul Dravid : 2013 ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்டை ஸ்ரீசாந்த் அவமானப்படுத்தியதாக, அணி பயிற்சியாளர் உப்டன் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார். அணியின் பயிற்சியாளராக பேடி உப்டன் இருந்தார். சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் அணியில் இடம்பெற்றிருந்தார். ஸ்ரீசாந்தின் ஒழுங்கீன நடவடிக்கையால், அவர் போட்டிகளில் இடம்பெற இயலாமல் இருந்தது.
இதனிடையே, ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பு, ஸ்ரீசாந்த், கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளரான தன்னை பொதுஇடத்தில் வைத்து அசிங்கப்படுத்தியதாக பேடி உப்டன் எழுதியுள்ள The Barefoot Coach புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஸ்ரீசாந்த் மறுத்துள்ளார். உப்டன் பொய், கூறுவதாகவும், அவர் இவ்வாறு சொல்வார் என்று தான் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். தன்னுடன் இருப்பவர்கள் அனைவருக்கும் மரியாதை குடுத்துத்தான் தனக்கு பழக்கமே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் செயலை இதுவரை செய்ததில்லை; இனிமேலும் செய்யவும் போவதில்லை என்று ஸ்ரீசாந்த் கூறினார்.
ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக, கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சாண்டிலா உள்ளிட்டோர், டில்லி சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரீயம் ( பிசிசிஐ) இவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் 2015ம் ஆண்டு இவர்கள் டில்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர். வாழ்நாள் தடையை எதிர்த்து, ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்ததை தொடர்ந்து, தடை விலக்கி கொள்ளப்பட்டது.குறிப்பிடத்தக்கது.