ஐ.பி.எல் 2025 தொடர் மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தாண்டு இறுதியில் ஏலம் நடைபெறலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்தப் பேச்சு வார்த்தையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் மெகா ஏலம் பற்றிய 10 அணி உரிமையாளர்களின் கருத்துக்கள், வீரர்கள் தக்கவைப்பு, பொருத்துவதற்கான உரிமை (ஆர்.டி.எம்) மற்றும் வெளியேற்றப்படுவது குறித்து அவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது.
இந்த பேச்சு வார்த்தைக் கூட்டத்தில், விவாதப் பொருளாக மாறிய மற்றொன்றுஎன்னவென்றால், ஒரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு வெளிநாட்டு வீரர்கள் வெளியேறுவதைப் பற்றி இருந்தது. ஒவ்வொரு சீசனிலும் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில வீரர்கள் போட்டிக்கு வருவதில்லை. சிலர் காயம் காரணமாக பங்கேற்பதில்லை என்றாலும், இன்னும் சில போலியான காரணங்களை குறிப்பிட்டு ஓய்வு எடுக்கிறார்கள்.
இந்த நிலையில், ஏலத்திற்கு பிறகு காயம் தவிர்த்து எந்த காரணத்திற்காகவும் விலகும் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) காவ்யா மாறன் தெரிவித்துள்ளார்
"ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, காயம் தவிர எந்த காரணத்திற்காகவும் ஒரு வீரர் சீசனில் விளையாட வரவில்லை என்றால், அவர் தடை செய்யப்பட வேண்டும். அணி உரிமையாளர்கள் தங்கள் சேர்க்கைகளை உருவாக்க ஏலத்தில் நிறைய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஒரு வீரர் ஏலத்தில் குறைந்த தொகைக்கு சென்று, அதன்பின் வரவில்லை என்றால், அது அணியின் கலவையையும் சமநிலையையும் பாதிக்கிறது. இந்த காரணத்திற்காக வெளிநாட்டு வீரர்கள் வராத பல நிகழ்வுகள் உள்ளன." என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் 2024 தொடரின் போது, ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்காவின் போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதனால், அவர் மீது ஐதராபாத் அணி நிர்வாகம் கடும் அதிருப்தி அடைந்ததாக பரவலாக தெரிவிக்கப்பட்டது. அவர் காயத்தை காரணம் என்று குறிப்பிட்டார், ஆனால் அவர் 2023 இல் ஆர்.சி.பி-க்காக விளையாடி சம்பாதித்த ரூ. 10.75 கோடிக்கு மாறாக அவர்களுக்காக விளையாடிய ரூ. 1.5 கோடியைப் பெறுவார் என்பதே அவர் விலகுவதற்கான முதன்மைக் காரணம் என்று ஐதராபாத் அணி நிர்வாகம் நம்புவதாகத் தெரிகிறது.
தக்கவைப்பு விதிகளில் மாற்றங்கள் தேவை
வெளிநாட்டு வீரர்கள் மீதான தனது நிலைப்பாட்டைத் தவிர, தக்கவைப்பு மற்றும் ஆர்.டி.எம் ஆகியவற்றில் அவர் விரும்பிய மாற்றங்கள் குறித்தும் காவ்யா மாறன் பேசினார். ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் ஏழு தக்கவைப்பு அல்லது ஆர்.டி.எம் விருப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு தக்கவைப்பு அல்லது ஆர்.டி.எம் பயன்படுத்தப்படுமா என்பது குறித்த தேர்வு, பிளேயருடனான விவாதங்களின் அடிப்படையில் உரிமையாளரிடம் இருக்க வேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை விதியை தளர்த்த வேண்டும் என்றும், ஒவ்வொரு அணியும் வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விதியை அகற்றுவது ஐதராபாத் போன்ற வலுவான வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய அணிக்கு பலம் சேர்க்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“