/indian-express-tamil/media/media_files/sWO39Yhpx70hRfUET3jf.jpg)
"கொல்கத்தா கோப்பையை வென்றாலும் அனைவரும் நாம் விளையாடிய ஸ்டைலை பற்றி பேசுகின்றனர்."என்று காவ்யா மாறன் கூறியுள்ளார்.
Kavya Maran | Sunrisers Hyderabad | IPL 2024: இந்திய மண்ணில் பரபரப்பாக நடந்து முடிந்த 17-வது ஐ.பி.எல். தொடரில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் அரங்கேறிய இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) பேட் கம்மின்ஸின் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை (எஸ்.ஆர்.எச்) 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
நடப்பு சீசனில் லீக் சுற்று மற்றும் பிளே ஆஃப் போட்டிகளில் அபாரமாக ஆடிய ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. இந்த இறுதிப் போட்டியை மைதானத்திற்கு வந்து நேரில் கண்டுகளித்த ஐதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணி தோல்வி அடைந்ததைக் கண்டு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அவருக்கு இணைய வாசிகள் பலரும் ஆறுதல் கூறி அவரது அணியைப் பாராட்டினர்.
இந்நிலையில், கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த ஐதராபாத் இம்முறை இறுதிப்போட்டிக்கு வரும் அளவுக்கு அட்டகாசமாக விளையாடியதாக அதன் உரிமையாளர் காவ்யா மாறன் பாராட்டியுள்ளார்.
இந்தப் போட்டி முடிந்த பின்னர் வீரர்களின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்ற காவ்யா மாறன், "நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள். அதை சொல்வதற்காகவே நான் இங்கே வந்தேன். உண்மையாக நீங்கள் எப்படி டி20 கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை மாற்றி மறுவரையறை செய்துள்ளீர்கள். அதனால் அனைவரும் நம்மைப் பற்றி பேசுகின்றனர். இறுதிப்போட்டி நடைபெற்ற நாள் நமக்கு சரியாக அமையவில்லை. ஆனால் உண்மையில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நன்றாக விளையாடினீர்கள்.
மிக்க நன்றி. கடந்த வருடம் நாம் கடைசி இடத்தைப் பிடித்தோம். இந்த வருடம் உங்களுடைய திறமையின் காரணமாக ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் நம்மை பார்க்க வந்தார்கள் என்று நினைக்கிறேன். அதனால் நம்மைப் பற்றி அனைவரும் பேசுகின்றனர்.
கொல்கத்தா கோப்பையை வென்றாலும் அனைவரும் நாம் விளையாடிய ஸ்டைலை பற்றி பேசுகின்றனர். அதற்காக நன்றி. சோகமாக இருக்க வேண்டாம். ஏனெனில் நாம் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம். இது மற்றொரு சாதாரண போட்டி கிடையாது." என்று அவர் கூறினார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
"You've made us proud." 🧡
— SunRisers Hyderabad (@SunRisers) May 27, 2024
- Kaviya Maran pic.twitter.com/zMZraivXEE
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.