10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் 27-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா பிரப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 4 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்த நிலையில், 13 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்த பிரியான்ஷ் ஆர்யா ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய பிரப்சிம்ரன் 23 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வதேரா 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியயேறிய நிலையில், அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங் சிங் 2 மேக்ஸ்வெல் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதிக்கட்டத்தில் அதிரடியில் அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 36 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 82 ரன்களும், ஸ்டோயினிஸ் 11 பந்துகளில், 1 பவுண்டரி 4 சிக்சருடன் 34 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. ஐதராபாத் அணி தரப்பில், ஹர்ஷெல் பட்டேல் 4 விக்கெட்டும், மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 246 ரன்கள் வெற்றி இலக்கான கொண்டு களமிறங்கிய ஐதராபாத் அணியில், அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 171 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 14 பவுண்டரி 10 சிக்சருடன் 141 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட், 37 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதிக்கட்டத்தில் க்ளாசன் 14 பந்துகளில்21 ரன்கள் எடுக்க ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு, 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணி 5-வது போட்டியில் விளையாடி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி, எஷான் மலிங்கா
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 23 போட்டிகளில், ஐதராபாத் 16 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில், பஞ்சாப் அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது.