IPL 2024 | Sunrisers Hyderabad | Rajasthan Royals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: SRH vs RR Live Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், டிராவிஸ் ஹெட் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா 12 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த அனுமோல்ப்ரீத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஐதராபாத் அணி 35 ரன்களுக்கு முக்கிய 2 விக்கெட்டகளை இழந்தது.
இதனைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹெட் – நித்தீஷ் ரெட்டி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்க்ள சேர்த்தனர். ஒருமுனையில் நித்தீஷ் சிக்சர்களாக விரட்ட, ஹெட் பவுண்டரிகளாக விரட்டி ரன்கள் எடுத்தனர். அணியின் ஸ்கோர் 131 ரன்களில் அரைசதம் கடந்த டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். 44 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய ஹென்றி க்ளாசன் தனது பங்குக்கு அதிரடியில் இறங்கிய நிலையில், சிக்சர்களாக பறக்கவிட்ட நித்தீஷ் ரெட்டி அரைசதம் கடந்து அசத்தினார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. நித்தீஷ் ரெட்டி 42 பந்துகளில் 3 பவுண்டரி 8 சிக்சருடன் 76 ரன்களும், க்ளாசன் 19 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 42 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் அணி தரப்பில், ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளும், சந்தீப் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்திய நிலையில், அஸ்வின் 4 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்து விக்கெட் வீழ்த்தாத நிலையில், உலக கோப்பை டி20 அணிக்கு தேர்வாகியுள்ள யுஸ்வேந்திர சஹால், 4 ஓவர்களில் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐதராபாத் அணி ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில், தான் சந்தித்த முதல் பந்திலேயே பட்லர் டக் அவுட் ஆனார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறினார். இதனையடுத்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெய்ஸ்வால் – ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில், 4-வது அணியின் ஸ்கோர் 13.3 ஓவர்களில் 135 ரன்களை எட்டியபோது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 40 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து அசத்தியது. அடுத்து களமிறங்கிய ஹெட் மயர் 13 ரன்களிலும், துருவ் ஜேரல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்த பராக் 49 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வெற்றியை நோக்கி வலிமையாக முன்னேறிய ராஜஸ்தான் அணி இறுதிக்கட்டத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசி 12 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரை வீசிய கேப்டன கம்மின்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்தார்.
2-வது பந்தில், 2 ரன்கள் எடுத்த பவல் 3-வது பந்தை பவுண்டரிக்கும், 4-வது மற்றும் 5-வது பந்தில் தலா 2 ரன்களும் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தை சந்தித்த பவல் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததால், ஐதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், நடராஜன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வீழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.