IPL 2024 | Sunrisers Hyderabad | Rajasthan Royals: இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இந்தத் தொடரில் தற்போது பிளே ஆஃப் போட்டிகள் நடந்து வரும் நிலையில், முதலாவது தகுதிச் சுற்றில் (குவாலிஃபையர் 1) சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: SRH vs RR Live Score, IPL 2024 Qualifier 2
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்று வரும் 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 12 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ராகுல் திரிபாதி களம் இறங்கினார்.
அதிரடியாக விளையாடி ராகுல் திரிபாதி 15 பந்தில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ட்ரெட்ன் போல்ட் பந்தில் சஹல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மார்க்ரம் 1 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 5 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினார்கள்.
ஆனால், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டிராவிஸ் ஹெட் 34 ரன்கள் எடுத்திருந்தபோது, சந்தீப் ஷர்மா பந்தில் அஸ்வின் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்துல் சமத், ஆவேஷ் கான் பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்து கோல்டன் டக் அவுட் ஆனார்.
அதே நேரத்தில், க்ளாசென் மற்றும் இம்பேக்ட் வீரர் ஷபாஸ் அகமது ஜோடி நிதானமாக ஆடினார்கள். அதிரடியாக விளையாடிய க்ளாசென் 34 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் களம் இறங்கினார். பேட் கம்மின்ஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆவேஷ் கான் பந்தில் துருவ் ஜுரேல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஜாவேத் உனாட்கட் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரகள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோஹ்லெர் கேட்மோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக அடித்து விளையாட, டாம் கோஹ்லெர் நிதானமாக விளையாடினார்.
டாம் கோஹ்லெர் 16 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பேட் கம்மின்ஸ் பந்தில் ராகுல் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால், 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷாபாஸ் அஹமது பந்தில் அப்துல் சமத் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரியான் பரக் பேட்டிங் செய்ய வந்தார்.
சஞ்சு சாம்சன் 10 ரன்னிலும், ரியான் பரக் 6 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 0 ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.
ஐதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி வரை போராடிய துருவ் ஜூரெல் 35 பந்துகளில் 56 ரன்களுடன் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
இதன் மூலம், இந்த ஐ.பி.எல். தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வரும் ஞாயிற்றுகிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“