இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கார் சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்த நபர் இன்று மரணம் அடைந்தார். இதையடுத்து, குசல் மெண்டிஸ் ஹொரேதுடுவா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் புறநகர் பகுதியான பானதூராவில் கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் சைக்கிளில் சென்ற 64 வயது முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில் முதியவர் படுகாயம் அடைந்தார். காயமடைந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் விபத்து நடந்த இடத்தில் இருந்த உள்ளூர் வாசிகள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்த விபத்து குறித்து இலங்கை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குசல் மெண்டிஸ் மது போதையில் வாகனம் ஓட்டினாரா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான 25 வயது குசல் மெண்டிஸ் இலங்கை அணிக்காக இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளிலும் 76 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் மீண்டும் பயிற்சியைத் தொடங்கிய இலங்கை தேசிய அணியில் ஒரு பகுதியாக குசல் மெண்டிஸ் இருந்தார். இலங்கை பல்லேகேலேவில் நடைபெற்று வந்த இந்த பயிற்சி முகாம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய பொதுமுடக்கத்தால் இலங்கையின் அனைத்து சர்வதேச போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இலங்கையில் பொதுமுடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மெண்டிஸ் சாலையில் வாகனத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"