Sri lanka vs south africa world cup 2019 review: காலம் தாழ்ந்த சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி, இலங்கையை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணியையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செஸ்டே-லே-ஸ்ட்ரீட்டி நகரின் ரிவர்சைட் மைதானத்தில் இலங்கையும், தென்னாப்பிரிக்காவும் நேற்று மோதின. தென்னாப்பிரிக்காவுக்கு இது சம்பிரதாய ஆட்டம் என்றாலும், இங்கிலாந்தை வீழ்த்தி உற்சாக மனநிலையில் இருந்த இலங்கைக்கு, அரையிறுதி கதவைத் தட்ட இது மிக முக்கியமான போட்டியாக இருந்தது.
டாஸ் வென்ற, தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ், பவுலிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டிமுத் கருணரத்னேவும், குசல் பெரேராவும் களமிறங்கினர். இதில், ரபாடா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே, கேப்டன் கருணரத்னே டு பிளசிஸ்-சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ, ஓரளவு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க, 67 ரன்களில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது இலங்கை. அப்போது, வரை கூட ஆட்டம் இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஆனால், அதன்பிறகு விக்கெட்டுகள் சரியத் தொடங்கின.
குசல் பெரேரா 30, அவிஷ்கா 30, குசல் மெண்டிஸ் 23 என்று விக்கெட்டுகள் சரிய, 111-5 என்று தள்ளாடியது இலங்கை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் வெறும் 11 ரன்களில், க்றிஸ் மொரிஸ் பந்தில் போல்டானாது ரசிகர்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியது.
தொடர்ந்து தனஞ்செயா டி சில்வா 24 ரன்னிலும், ஜீவன் மெண்டிஸ் 18 ரன்னிலும், திசாரா பெரேரா 21 ரன்னிலும் அவுட்டாக, அனுமார் வால் போன்ற இலங்கையின் நீண்ட பேட்டிங் வரிசை, 49.3 ஓவரில், 203 ரன்களுக்கு சுருங்கிப் போனது. க்றிஸ் மொரிஸ், ப்ரேடோரியஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, 204 எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், டி காக் 15 ரன்களில் மலிங்கா ஓவரில் போல்டானாலும், ஹஷிம் ஆம்லா 105 பந்துகளில் 80 ரன்களும், கேப்டன் டு பிளசிஸ் 103 பந்துகளில் 96 ரன்களும் எடுத்து, இறுதிவரை களத்தில் நிற்க, தென்னாப்பிரிக்கா 37.2 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டியது.
தென்னாப்பிரிக்காவின் காலம் கடந்த வெற்றியால், அந்த அணிக்கு ஒரு சாதகமும் இல்லை. ஏற்கனவே, உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்டது. இருப்பினும், 7வது போட்டியில் ஆடிய இலங்கைக்கு இது மூன்றாவது தோல்வியாகும். தென்னாப்பிரிக்க வெற்றி உண்மையில் பாகிஸ்தானுக்கு தான் லாபம். ஏனெனில், இன்று நடக்கும் போட்டியில், ஆப்கானிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில் பாகிஸ்தான் நான்காவது இடத்திற்கு முன்னேறிவிடும். அதன்பிறகு, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையில் மட்டுமே, நான்காவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி இருக்கும். இலங்கை உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இறுதியாக, இலங்கை முன்னாள் கேப்டன் மேத்யூஸ் பற்றி மட்டும் நான் பேச நினைக்கிறேன். 2018ம் ஆண்டு நடந்த ஆசிய தொடரின் தோல்விக்குப் பிறகு, அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டவர் மேத்யூஸ். ஆனால், அதற்கு முன்னதாக அவரது தலைமையில் இலங்கை பல தொடர்களை சிறப்பாக வென்றிருந்தது. ஆஸ்திரேலியாவை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது, இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது, 2014ம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்றது. அவரது பேட்டிங்கும் உச்சத்தில் இருந்தது.
ஏதோ கல்லி கிரிக்கெட் விளையாட்டு போல, அடிக்கடி கேப்டன்களை மாற்றிக் கொண்டே இருந்த இலங்கை நிர்வாகம், இப்போது தோல்வி என்ற வார்த்தையை தங்கள் அகராதியில் இருந்து மாற்ற முடியாமல் தவிக்கிறது.
உபுல் தரங்கா, திசாரா பெரேரா, சமரா கபுகேதரா, லசித் மலிங்கா, தினேஷ் சந்திமல் என ஜூலை 2017ல் இருந்து, டிசம்பர் 2017க்குள் இத்தனை கேப்டன்களை மாற்றிய ஒரே அணி இலங்கை மட்டுமே. அதன்பிறகு, மீண்டும் மேத்யூசை கேப்டனாக்கி, மீண்டும் அவரை அப்பதவியில் இருந்து நீக்கி, மீண்டும் சந்திமலை கேப்டனாக்கி, மீண்டும் அவரை பதவியில் இருந்து நீக்கி, இப்போது டிமுத் கருணரத்னேவை கேப்டனாக்கி தொடர் வெற்றிப் பெற முடியாமல் முனங்கிக் கொண்டிருக்கிறது.
மேத்யூஸ் ஒரு காலத்தில் 'இலங்கையின் தோனி' என்று அழைக்கப்பட்டவர். 2017ம் ஆண்டில் இருந்து நடைபெறும் இலங்கை நிர்வாக உட்பூசல் காரணமாக மேத்யூஸ் பந்தாடப்பட, இறுதியில் அந்த விவகாரத்தில், இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரே தலையிட்டு, 'நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கும் அளவுக்கு சென்றது. அதன்பிறகு, மீண்டும் மேத்யூஸ் அணிக்கு அழைக்கப்பட, இன்று, அவரும் அடிக்க முடியாமல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமலும் தடுமாறிக் கொண்டிருக்க, இலங்கை கிரிக்கெட் அணியும், தனது பிரகாசத்தை ஏறக்குறைய முற்றிலும் இழந்து நிற்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.