14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையும், வங்கதேசமும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீமின் 'தோனி' ஆட்டத்தால் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணியில் களமிறங்கிய முஷ்பிகுர், 150 பந்துகளை சந்தித்து 144 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, 35.2வது ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பலம் வாய்ந்த இலங்கை அணி, படுமோசமாக தோற்று மீண்டும் ரசிகர்களிடையே அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அதேசமயம், 137 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது வங்கதேசம்.
வங்கதேசத்திற்கு வெளியே அந்த அணி பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி இதுதான். இதற்கு முன்னதாக, 2013ல் புலேவாயோ நகரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 121 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றதே வங்கதேச அணியின் வங்கதேசத்திற்கு வெளியேயான பெரிய வெற்றியாக இருந்தது.
டாக்காவில் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே, வங்கதேச அணியின் நம்பர்.1 பெரிய வெற்றியாகும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே இலங்கையின் மிகப்பெரிய தோல்வி இதுதான். இதற்கு முன்னதாக, 1986ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இலங்கையின் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது. ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று முக்கிய அணிகளின் பெரிய தோல்வியும் நேற்றைய இலங்கையில் தோல்வி தான். இதற்கு முன் 2008ல் இலங்கைக்கு எதிராக இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இந்த மூன்று அணிகளில் பெரிய தோல்வியாக இருந்தது. அதையும் நேற்று இலங்கை பிரேக் செய்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிராக இவ்வளவு குறைந்த ரன்கள் எடுத்து இலங்கை சுருண்டிருப்பதிலும் நேற்றைய போட்டி தான் நம்பர்.1. இதற்கு முன்னதாக, 2009ல் டாக்காவில் நடந்த போட்டியில் 147 ரன்கள் எடுத்து இலங்கை ஆல் அவுட் ஆகியிருந்தது.
நேற்றைய போட்டியில் வங்கதேசம் அடித்த மொத்த ரன்கள் 261. அதில் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் அடித்த ரன்கள் 144. அதாவது வங்கதேச ஸ்கோரில் 55.17 சதவிகித பங்கு முஷ்பிகுர் உடையது.
Player of the Match : .@mushfiqur15 pic.twitter.com/bEHEBAkGAR
— Bangladesh Cricket (@BCBtigers) September 15, 2018
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், தனிநபரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர், நேற்று முஷ்பிகுர் அடித்த 144 ரன்களாகும். அதேசமயம், பாகிஸ்தானின் யூனுஸ் கானும் 2004ம் ஆண்டு ஹாங்காங்கிற்கு எதிராக 144 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால், 2012ம் நடந்த ஆசிய கோப்பை தொடரில், 'தளபதி' விராட் கோலி பாகிஸ்தானிற்கு எதிராக 183 ரன்கள் விளாசியதே, இதுவரை தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.
ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச வீரர் ஒருவரின் ஐந்தாவது சதம் இதுவாகும். தவிர, முஷ்பிகுர் ரஹீமின் இரண்டாவது ஆசிய கோப்பை சதமாகும். நேற்று முஷ்பிகுர் அடித்த 144 ரன்கள் தான், ஒருநாள் போட்டிகளில் வங்கதேச வீரர் ஒருவரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். 2009ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக தமீம் இக்பால் அடித்த 154 ரன்கள் தான் இதுவரை டாப் ஸ்கோர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.