Steve Smith | T20 World Cup 2024 | Australia: 20 அணிகள் பங்கேற்கும் 9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை 20 அணிகளும் இன்றைக்குள் (மே 1ம் தேதி) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்தது.
இந்நிலையில், இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், வார்னர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இருப்பினும், ஸ்டீவ் சுமித், ஜேசன் பெர்ஹண்ட்ராப், மேட் ஷார்ட் போன்ற முன்னணி வீரர்களும், நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிரடியாக விளையாடி வரும் ஜேசன் பிரேசர் மெக்கர்க்கும் அணியில் இடம்பெறவில்லை.
ஸ்டீவ் ஸ்மித் நீக்கம் ஏன்?
டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
/indian-express-tamil/media/post_attachments/0645989d-2e4.jpg)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு காலத்தில் அனைத்து ஃபார்மேட் வீரராக ஜொலித்தவர். 2015 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு அவர் ஆஸ்திரேலியாவுக்காக ஒரு ஒயிட் -பால் உலகக் கோப்பையை கூட தவறவிட்டதில்லை. டி20, ஒருநாள் என எல்லா உலகக் கோப்பை தொடரிலும் இடம் பிடித்தார்.
2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் 379 மற்றும் 302 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்ல உதவினார். இருப்பினும், அவரால் டி20 போட்டிகளில் அதேபோல் செயல்பட முடியவில்லை. 158 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 33 அரை சதங்கள் என 43.91 சராசரியில் 5446 ரன்களை குவித்துள்ள 34 வயதான ஸ்மித், 67 டி20 போட்டிகளில் 125.45 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 24.86. சராசரியில் 1094 ரன்களை எடுத்துள்ளார்.
டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் முதல் பந்தில் இருந்து தங்களது அதிரடியை காட்ட தொடங்கி இருக்கும் இந்த நாட்களில், அவர்களுடன் ஈடு கொடுப்பதில் இருந்து ஸ்மித் விலகி நிற்கிறார். தனக்கான இடத்தை தக்க வைக்கவும் போராடுகிறார். பொதுவாக, மிகவும் துறுதுறுப்புடன் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ளும் அவரால் தற்போது பந்துக்கு ஏற்ப ரன்களை குவிக்க முடிவதில்லை. அந்த முயற்சியில் பல முறை அவர் தோல்வியையே தழுவி இருக்கிறார்.
குறிப்பாக, டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அவரால் மெச்சும் படியான பேட்டிங்கை வெளிப்படுத்த முடிவதில்லை. இதுவரை 14 டி20 உலகக் கோப்பையில் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19.00 என்ற சராசரியில் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 125.45 என்ற அவரது கேரியர் பெஸ்ட் ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஒப்பிடும்போது அவரது தற்போதைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 111.76 ஆகக் குறைந்துள்ளது. எனவே, ஆஸ்திரேலிய அணி தேர்வாளர்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு தாங்கள் முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட வீரர்களை ஆதரிக்க முடிவு செய்து, முன்னணி வீரரான ஸ்மித்தை கழற்றி விட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“