மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரிஸ் பாராஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எஃப்-64 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில், 70.59 மீட்டர் தூரம் எறிந்து பாரா ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.
சாதனை நாயகன் சுமித் அன்டில்
இந்திய ஈட்டி எறிதல் வீரர் சுமித் அண்டில், 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கம் வென்றிருந்த அசத்தி இருந்தார். அந்தப் போட்டியில் அவர் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்திருந்தார். அதுவே இதுவரை பாராலிம்பிக்ஸ் சாதனையாக இருந்தது. ஆனால், அதனை இந்த இறுதிப் போட்டியில் 3 முறை அவரே முறியடித்தார்.
சுமித் அன்டில் தனது முதல் முயற்சியிலே 69.11 மீட்டருக்கு ஈட்டி எறிந்த நிலையில், 2 முயற்சியில் அவர் 70.59 மீட்டருக்கு ஈட்டியை எறிந்தார். தனது 5வது முயற்சியில் அவர் 69.04 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார். 70.59 மீட்டருக்கு அவர் ஈட்டி எறிந்தது, புதிய பாராலிம்பிக் சாதனையாக மாறியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்று தந்தது. இதன்மூலம், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்ந்து 2 முறை தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் சுமித் அண்டில் படைத்துள்ளார்.
மேலும், இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகராவிற்கு பின்னர், தொடர்ந்து 2 பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் சுமித் அன்டில் பெற்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தவறவிட்ட நிலையில், அந்த சாதனையை சுமித் அண்டில் பாராலிம்பிக்ஸில் படைத்து மிரட்டி இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“