‘எனக்கு இன்னொரு செட் அல்லது கூடுதலாக இன்னொரு செட்டும் கிடைத்திருந்தால், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ரோஜர் ஃபெடரருக்கு எதிரான எனது முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார் இந்திய இளம் டென்னிஸ் வீரர். உலகின் நம்பர் 1 வீரர் ரோஜர் ஃபெடரர், இந்தியாவின் அறிமுக வீரரை அமெரிக்க ஓபன் முதல் போட்டியில் 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை முதல் ஒரு இந்திய வீரரின் பெயர் டிரெண்டிங்கில் சுற்றிச் சுற்றி வந்தது. யுஎஸ் ஓபன் சிங்கிளில் இந்திய பெயரா? என்று ரசிகர்களும் ஆர்வமுடன் தேடத் தொடங்க, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் விடை கொடுத்திருக்கும் அந்த பெயர் சுமித் நகல்.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில், இந்திய வீரர் சுமித் நகல் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரில் களமிறங்க, அவரின் எதிர்முனையில் வார்ம் அப் செர்வீஸ் செய்துக் கொண்டிருந்தது ரோஜர் ஃபெடரர்.
போட்டி தொடங்கியவுடன், கொஞ்சமும் பதட்டம் இல்லாமல் தனது அதிரடி ஆட்டத்தை துவக்கிய சுமித், முதல் செட்டை 6-4 என்று கைப்பற்ற, ஒரு நொடி பெடரரே இங்கு என்ன நடக்கிறது என்று தனது வழக்கமான க்யூட் மெல்லிய ஸ்மைலுடன் அனலைஸ் செய்ய, அடுத்த செட்டுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் சுமித்.
ஆனால், அடுத்த இரு சுற்றுகளையும் 6-1, 6-2 என்று முழு ஆதிக்கம் செலுத்தி ஃபெடரர் கைப்பற்ற, சகஜ நிலைக்கு அப்போது தான் திரும்பினர் பார்வையாளர்கள், ஃபெடரர் உட்பட. இறுதி செட்டில் மீண்டும் சுமித் நகல் டஃப் கொடுக்க, 6-4 என்ற கணக்கில் சற்றே போராடி வென்றார் ஃபெடரர்.
தோற்றாலும், ஜெயித்தாலும் மீசையை முறுக்கு கதையாய் தோற்றாலும், பாகுபலிக்கு லைட் பீதி கொடுத்த வகையில் இந்திய ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார் இந்த இளம் ஸ்மேஷர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுமித் நகல், அமெரிக்க ஓபன் டென்னிஸில் பிரதான சுற்றுக்கு தகுதிப் பெற்ற போது, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, “யு.எஸ் ஓப்பனுக்குத் தகுதிப் பெற்றதற்கு வாழ்த்துகள் சுமித் நகல். உங்களுக்கு பெரும் போட்டி ஒன்று இருக்கிறது. கிரேட் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளப்போகிறீர்கள். ஆனால், நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துவோம். குட்லக்!” என்று உத்வேகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்த பிறகு பேசிய சுமித், “எனக்கு இன்னொரு செட் அல்லது கூடுதலாக இன்னொரு செட்டும் கிடைத்திருந்தால் இன்னும் கதை சிறப்பாக அமைந்திருக்கும்” என்றார்.
ரோஜர் ஃபெடரர் கூறுகையில், “முதல் செட் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. மிகவும் வலிமையாக விளையாடிய அவருக்கே அந்த பெருமை சாரும். நான் நிறைய பந்துகளை அந்த செட்டில் தவறவிட்டேன். இதனால், எனது தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்தேன். நல்ல வேளையாக தவறை திருத்தியும் கொண்டேன்” என்று சுமித் நகலை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.