/indian-express-tamil/media/media_files/2025/03/27/YTdYUJE9Ho1Dqomi4ALG.jpg)
ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கமெண்ட் போட்டுள்ளார்.
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் சனிக்கிழமை (மார்ச் 22) முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் திரில் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.
ஆதரவு
இந்த நிலையில், இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கமெண்ட் போட்டுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தைச் சேந்த வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து ரசிகர் ஒருவர் எஸ்கே தளத்தில், "இந்தியாவின் சிறந்த 15 வீரர்களில் சுந்தர் எப்படியும் இடம் பெறுவார். ஆனால் 10 அணிகள் இருக்கும்போது எந்த ஐ.பி.எல் ஆடும் லெவனிலும் அவர் இடம் பெறவில்லை என்பது ஒரு மர்மமாகும்." என்று பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, "எனக்கு கூட ஆச்சரிமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
I have been wondering this too:)
— Sundar Pichai (@sundarpichai) March 25, 2025
ராஜஸ்தான் - கொல்கத்தா மோதல்
இதனிடையே, ஐ.பி.எல்.தொடரில் நேற்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பவுலிங் போட்டது. இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துருவ் ஜோரேல் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் வைபவ், ஹர்ஷித் ரானா, மோயின் அலி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கொல்கத்தா அணி துரத்தியது. தொடக்க வீரர் குவிண்டன் டிகாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கொல்கத்தா 17.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டிப்பிடித்து. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.
கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய குவிண்டன் டிகாக் 61 பந்துகளில் 97 ரன்களுடனும், 17 பந்துகளில் 22 ரன்கள் விளாசிய அங்க்ரிஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த வெற்றி மூலம் தரவரிசையில் கொல்கத்தா 6வது இடத்தில் உள்ளது. தோல்வி மூலம் தரவரிசையில் ராஜஸ்தான் 10-வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல், தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.