இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை, டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சா ட்விட்டரில் கூறிய வார்த்தை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் ஃபீவர் ரசிகர்களிடம் இருந்து இப்போது தான் குறைந்த நிலையில், தற்போது ஃபுட் பால் ஃபீவர் ரசிகர்களை மையம் கொண்டுள்ளது. 4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது.
கிரிக்கெட்டிற்கு இருக்கும் அதிகப்படியான வரவேற்பு கால் பந்திற்கும் கிடைத்துள்ளதா? என்றால் அது சந்தேகம் தான். மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவில் கால் பந்திற்கான ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. இது நினைத்து அண்மையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, சீனத் தைப்பே அணியுடனான போட்டியைக் காண 2500 ரசிகர்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். அரங்கில் 90 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தன. இதை சுட்டிக் காட்டி அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “ இந்திய கால்பந்து அணிக்கு மக்களும், ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள்” என்று வேதனையுடன் கூறியிருந்தார்.
இந்த வீடியோவைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, குர்னல் பாண்டியா ஆகியோர், “விளையாட்டு ரசிகர்கள், இந்திய கால் பந்து போட்டியை மறந்து விட கூடாது. முடிந்த வரை அவர்களுக்கு ஆதரவு தாருங்கள்” என்று வேண்டுக்கோள் விடுத்திருந்தனர். அதன் பின்பு மும்பை அந்தேரி பகுதியில் உள்ள கால்பந்து அரங்கில், இந்தியா- கென்யா அணிகளுக்கு இடையிலான கால்பந்து லீக் போட்டியை நேரில் காண ரசிகர்கள் எல்லா டிக்கெட்டையும் வாங்கி குவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் சாதனையாளரே எனக்கு டிக்கெட் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். சானியா மிர்சாவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் அதிகப்படியான வரவேற்புகளை அளித்துள்ளனர்.