வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. தவிர, பிங்க் பால் டெஸ்ட் என்றழைக்கப்படும் தனது முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் கோலி, "கங்குலியின் காலமான 2000ல் தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பயணத்தை துவங்கியது. அது தற்போது வரை தொடர்வதில் மகிழ்ச்சி. தாதா காலத்தில் துவங்கிய பயணத்தை நாங்கள் தற்போது முன்னெடுத்து செல்கிறோம்" என்றார்.
இதற்கு சற்றே காட்டமாக பதிலளித்த சுனில் கவாஸ்கர், "2000ம் ஆண்டில் தாதாவின் (கங்குலியின்) அணியுடன் இந்தியாவின் வெற்றி தொடங்கியது என்று கேப்டன் கூறினார். தாதா பிசிசிஐ தலைவர் என்பது எனக்குத் தெரியும். எனவே கோலி அவரைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்ல விரும்பினார். ஆனால் இந்தியா 70 மற்றும் 80களிலும் வெற்றி பெற்றது. அவர் அப்போது பிறக்கவேயில்லை" என்றார்.
சரி... கோலி சொன்னது போல கங்குலி காலத்தில் தான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை பெறத் தொடங்கியதா அல்லது கவாஸ்கரின் கூற்று போல 'நாங்க அப்பவே அப்படி தம்பி' என்று சொன்னது சரியா என்பதை எண்களாக பார்ப்போம்,
1971 - 1980
இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா வெளிநாடுகளில் விளையாடிய மொத்த டெஸ்ட் போட்டிகள் - 30
அதில் இந்தியா பெற்ற வெற்றி - 6
தோல்வி - 12
டிரா - 12
ஆவரேஜ் - 31.79
அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 465
குறைந்த பட்ச ஸ்கோர் - 42
1981 - 1990
இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா வெளிநாடுகளில் விளையாடிய மொத்த டெஸ்ட் போட்டிகள் - 45
அதில் இந்தியா பெற்ற வெற்றி - 3
தோல்வி - 14
டிரா - 28
ஆவரேஜ் - 33.79
அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 606
குறைந்த பட்ச ஸ்கோர் - 128
1991 - 2000
இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா வெளிநாடுகளில் விளையாடிய மொத்த டெஸ்ட் போட்டிகள் - 35
அதில் இந்தியா பெற்ற வெற்றி - 2
தோல்வி - 14
டிரா - 19
ஆவரேஜ் - 31.20
அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 537
குறைந்த பட்ச ஸ்கோர் - 66
2001 - 2010
இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா வெளிநாடுகளில் விளையாடிய மொத்த டெஸ்ட் போட்டிகள் - 61
அதில் இந்தியா பெற்ற வெற்றி - 22
தோல்வி - 20
டிரா - 19
ஆவரேஜ் - 37.02
அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 707
குறைந்த பட்ச ஸ்கோர் - 99
2011 - 2019
இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா வெளிநாடுகளில் விளையாடிய மொத்த டெஸ்ட் போட்டிகள் - 50
அதில் இந்தியா பெற்ற வெற்றி - 15
தோல்வி - 23
டிரா - 12
ஆவரேஜ் - 31.24
அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 622
குறைந்த பட்ச ஸ்கோர் - 94
மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை பார்த்தால் நமக்கு தெரிவது ஒன்றே ஒன்று தான். 1970 ளிலிருந்து - 2000 வரை இந்திய டெஸ்ட் அணி வெற்றிக்காக பெரிதாக போராடவில்லை. அதற்கு பதில், தோற்றுவிடக் கூடாது என்பதில் ஏகத்துக்கும் கவனம் செலுத்தி இருக்கிறது. இந்த 30 வருட காலத்தில் மொத்தம் 110 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 11 போட்டிகளில் மட்டுமே வென்றது.
மீதமுள்ள போட்டிகளில் தோற்றுவிட்டதோ என்று நினைத்தால் அதுதான் இல்லை. 59 போட்டிகளில் டிரா செய்திருக்கிறது இந்தியா. 40 போட்டிகளில் தோற்றிருக்கிறது. அதாவது தோற்ற போட்டிகளை விட டிரா செய்த போட்டிகளின் எண்ணிக்கை அதிகம். அதேசமயம், வெற்றி விகிதமோ மிக மிகக் குறைவு.
2000ம் ஆண்டிலிருந்து, அதாவது கங்குலி காலத்தில் இருந்து 2007ல் தொடங்கிய தோனி காலத்தையும் சேர்த்து, 2001 - 2010 வரை பார்த்தோமெனில், இங்கு தான் இந்திய தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பிக்கிறது.
இந்தக் காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் மொத்தம் விளையாடிய 61 டெஸ்ட்டில் 22ல் வெற்றிப் பெற்றிருக்கிறது. தோல்வி - 20. டிரா 19.
அதாவது, டிரா என்ற முடிவை விரும்பாமல், வெற்றியை அதிகம் வசப்படுத்த இந்தியா முயன்றதையே இந்த முடிவுகள் காட்டுகிறது. இங்கு டிராவை விட தோல்வியடைந்த போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது பாருங்கள். காரணம், டிரா தேவையில்லை; 'ஒன்று வெற்றி... இல்லையேல் தோல்வி' என்ற நிலைப்பாடே காரணம்.
ஆனால், ஒரு விஷயம் உண்மை, கிரிக்கெட்டில் ஒப்பீடு என்பதே தவறு. ஒவ்வொரு காலக்கட்டமும் ஒவ்வொரு சவால்களை கொண்டது. அந்த சவால்களை நாம் ஒப்பிடவே முடியாது. ஒப்பிடவும் கூடாது.
இருப்பினும், எண்கள் வாரியாக நாம் பேச வேண்டுமெனில், கோலி சொன்னது போல், வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தது கங்குலியின் தசாப்தங்களில் இருந்து தான் என்பது எவ்வளவு உண்மைவோ, கவாஸ்கர் சொன்ன காலக்கட்டங்களில், அதிகம் வெற்றிப் பெற முடியவில்லை என்றாலும், தோல்விகளை அதிகம் நெருங்கவிடாத போராட்ட குணம் கொண்ட அணி இந்தியா என்பதும் உண்மையே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.