இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
தற்போது இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
இந்நில்லயில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடியதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் காரணம் என்று சொல்வது அவரது காலை நக்குவதற்கு சமமானது என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். மேலும், கடந்த 2 - 3 ஆண்டுகளாக அதிரடியான அணுகுமுறையைத் தான் இந்திய அணி கையாண்டு வருகிறது என்றும், இதற்கான ஒட்டுமொத்த புகழும் கேப்டன் ரோகித்தைத்தான் சாரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘தி இந்து’ ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிகைக்கு சுனில் கவாஸ்கர் எழுதிய பத்தியில் கம்பீரைக் காரணமாகக் கூறுபவர்களையும், கம்பீரைப் புகழ்பவர்களையும் ‘foot-lickers of highest quality' என்று குறிப்பிட்டு சாடியுள்ளார்.
அந்தப் பத்தியில் சுனில் கவாஸ்கர், "செய்தித்தாள் ஒன்றில் ரோகித் சர்மாவின் அன்றைய அதிரடி அணுகுமுறையை ‘பாஸ்பால்’ அதாவது இந்திய அணியின் கேப்டன், பாஸ் என்ற பொருளில் பாஸ்பால் என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். சில தேய்ந்த பழைய அதிகார மட்டம் கம்பீர்தான் இதற்குக் காரணம் என்பது போல் ‘காம்பால்’ என்று பெயரிட்டனர். இங்கிலாந்தின் பேட்டிங் அணுகுமுறை மெக்கல்லம்-பென் ஸ்டோக்ஸ் அணுகுமுறையில் அதிரடி அவதாரம் எடுக்க ரோகித் சர்மா அத்தகைய அணுகுமுறையை சில வருடங்களாகவே கையாண்டு வருவதைப் பார்க்கிறோம்.
கம்பீர் இப்போதுதான் கோச் ஆக சேர்ந்திருக்கிறார். ஆகவே ரோகித்தின் ஆக்ரோஷத்தை, அணுகுமுறைக்கு கம்பீரை புகழ்வது அவரது காலை நக்குவதற்கு சமமானது. கம்பீரே இத்தகைய அதிரடி அணுகுமுறையில் ஆடியதில்லை. மெக்கல்லம் ஆடிய வழியில் கம்பிர் ஆடியிருக்கிறாரா என்பதே என் கேள்வி. இந்த அதிரடி அணுகுமுறைக்கு ஒருவரைப் பாராட்ட வேண்டுமென்றால் அது ரோகித் சர்மாவை மட்டும்தான். இந்த பால், அந்த பால் என்றெல்லாம் கதைக்காமல் ரோகித் சர்மாவில் உள்ள ஹிட்டை வைத்து ‘கோஹிட்’ என்று சொல்லலாம். புதிதாக யோசிக்க வேண்டும், அதை விடுத்து அதே அறுவையான பேஸ்பால் என்று ஏன் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“