Sunil Gavaskar on MS Dhoni Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிளிரச் செய்த இந்திய கேப்டன்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. அவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய 3 வகையான (ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ) உலக கோப்பையையும் கைப்பற்றியது. மேலும் ஏனைய அணிகளால் பதிவு செய்யப்பட ரெக்கார்டுகளையும் தகர்த்தெறிந்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி 2019ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 15 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். தற்போது ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக (2008ம் ஆண்டு முதல்) வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.
இந்திய அணி பயிற்சியாளராக தோனி – கவாஸ்கர் பதில்

இந்நிலையில், தோனி இந்திய தேசிய அணியின் பயிற்சியாளராக வர வேண்டுமா என்பது குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
2019 ஒருநாள் உலகக் கோப்பையிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த தோனி, 2021ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசராக இருந்தார்.
தோனி இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க முடியுமா என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கவாஸ்கரிடம் கேட்கப்பட்டது. தோனி பயிற்சியாளராகப் பொறுப்பேற்க முடியும். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரால் இருக்க முடியாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டியின் போது கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசுகையில், “எம்.எஸ். தோனி சிறிது காலம் கழித்து (இந்திய அணியில்) பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கலாம். அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அணியுடன் எந்தப் பணியையும் எடுப்பதற்கு முன், உங்களுக்கு சிறிது கூலிங்-ஆஃப் பீரியட் காலம் தேவை என்று நான் நம்புகிறேன்.
(ஒரு வீரராக ஓய்வு பெற்ற பிறகு) அது தேர்வுக் குழுவாக இருந்தாலும், மேலாளராக இருந்தாலும் அல்லது பயிற்சியாளராக இருந்தாலும், விளையாடும் வீரரைப் பற்றி நீங்கள் முடிவெடுப்பதால், உங்களுக்கு 2 அல்லது 3 வருட கூலிங்-ஆஃப் பீரியட் தேவை என்று நினைக்கிறேன். நீங்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் யாருக்கும் மூன்று வருட கூலிங்-ஆஃப் பீரியட்டை வழங்க முடியும்.” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil