Sunil Gavaskar on Rohit Sharma captain Tamil News: விராட் கோலியின் கேப்டன்சி விலகலுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரியில் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது, அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்த்தவர்களில் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கரும் ஒருவர். ஆனால், ரோகித் சர்மாவின் பதவியேற்புக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறத் தவறியது. இதேபோல், இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் தோல்வியடைந்தது. இதற்கு முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியைச் சந்தித்தது.
ரோகித் தலைமையிலான இந்திய அணியின் இந்த தொடர் தோல்விகள் சுனில் கவாஸ்கருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த தோல்விகளுக்கு கேப்டன் ரோகித்துடன் ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகிய யிற்சி ஊழியர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் உடனான "ஐடியா எக்ஸ்சேஞ்" நிகழ்ச்சியில் பேசிய சுனில் கவாஸ்கர், “அவரிடமிருந்து (ரோகித்) நான் அதிகம் எதிர்பார்த்தேன். இந்தியாவில் இது வித்தியாசமானது. ஆனால் வெளிநாட்டில் நீங்கள் சிறப்பாகச் செயல்படும்போது அதுதான் சோதனை. அங்குதான் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம் ஏற்பட்டது. டி20 வடிவத்தில் கூட, ஐபிஎல்-ன் அனைத்து அனுபவங்களுடனும், கேப்டனாக நூற்றுக்கணக்கான போட்டிகள், சிறந்த ஐ.பி.எல் வீரர்களின் கலவையுடன் இறுதிப் போட்டிக்கு வர முடியாமல் போனது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
‘ஏன் முதலில் பீல்டிங் செய்தீர்கள்?’ என்று அவர்கள் (பி.சி.சி.ஐ) கேள்விகளைக் கேட்க வேண்டும். ஓகே, மேகமூட்டமாக இருந்தது என்று டாஸில் விளக்கப்பட்டது. அதற்குப் பிறகு வரும் கேள்வி என்னவென்றால், ‘ஷார்ட் பந்தில் டிராவிஸ் ஹெட்டின் பலவீனம் உங்களுக்குத் தெரியாதா?’ அவர் 80 ரன்கள் எடுத்திருந்தபோது மட்டும் ஏன் பவுன்சர் பயன்படுத்தப்பட்டது. ஹெட் பேட்டிங் செய்ய வந்த தருணத்தில், எங்களுடன் வர்ணனையில் இருந்த ரிக்கி பாண்டிங், 'அவருக்கு பவுன்ஸ் போடுங்கள்' (பவுன்ஸ் ஹிம்… பவுன்ஸ் ஹிம்…) என்று கூறியிருந்தார். இது அனைவருக்கும் தெரியும், ஆனால் யாரும் முயற்சிக்கவில்லை.
தற்போது நாம் என்ன வகையான தயாரிப்பைப் பற்றி பேசுகிறோம்? இப்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் உதாரணம் உங்களுக்கு முன்னால் உள்ளது. நீங்கள் ஏதேனும் போட்டிகளில் விளையாடுகிறீர்களா? அப்படியென்றால் 20-25 நாட்கள் பற்றி என்ன பேசிக்கொண்டீர்கள்?, நீங்கள் தயாரிப்பைப் பற்றி பேசும்போது, அதற்கு உண்மையாக இருங்கள். 15 நாட்களுக்கு முன்பு, இரண்டு பயிற்சி ஆட்டங்களை விளையாடுங்கள். முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கலாம். ஆனால் தடுமாறும் வீரர்கள் உண்மையில் சிறப்பாக செயல்படாதவர்களுக்கு சவாலாக இருக்கலாம். அவர் போதுமானவராக தன்னை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
உண்மை என்னவென்றால், முக்கிய வீரர்கள் சீக்கிரம் செல்ல விரும்பவில்லை. என்ன வந்தாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும் சீக்கிரம் சென்றால் வேலைப்பளுவைப் பற்றி பேசுவார்கள். உங்களை உலகின் மிகச்சிறந்த அணி அல்லது ஆரம்ப தலைமுறையை விட ஃபிட்டர் என்று அழைக்கிறீர்கள் பிறகு எப்படி இவ்வளவு சீக்கிரம் உடைந்து போகிறீர்கள்? நீங்கள் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடும்போது உங்களுக்கு எப்படி பணிச்சுமை பிரச்சனை ஏற்படுகிறது?.
பேட்டர்கள் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்கிறார்கள் என்றால், உங்கள் நுட்பத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் எப்படி பேட்டர்களை மேம்படுத்த முயற்சித்தீர்களா? அல்லது நீங்கள் அவரிடம் சொல்ல முயற்சித்தீர்களா? அல்லது வேறு கார்டை எடுத்துக் கொள்ள சென்னீர்களா?. லெக்-ஸ்டம்ப் கார்டை எடுக்க வேண்டாம், மிடில் மற்றும் ஆஃப் ஸ்டம்ப் கார்டை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறினீர்களா?
ஒருமுறை வீரேந்திர சேவாக்கை அணியில் இருந்து வெளியேற்றியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் அதிக ரன்கள் எடுக்கவில்லை. நான் அவரிடம், ‘விரு, ஆஃப் ஸ்டம்ப் கார்டை மட்டும் முயற்சி செய்’ என்றேன். அதற்கு அவர் என்னிடம் ‘ஏன், சன்னி பாய்?’ என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம், ‘பாருங்கள், நீங்கள் ஃபுட்வொர்க்கிற்கு பெயர் பெற்றவர் அல்ல. என்ன நடக்கிறது என்றால், சில சமயங்களில் நீங்கள் ஆட்டமிழக்கும்போது, டெலிவரிக்காக நீங்கள் கையை நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள், அது உங்களுக்கு விஷயங்களை கடினமாக்குகிறது. எனவே, ஆஃப்-ஸ்டம்ப் கார்டை எடுத்துக் கொண்டால், பந்து ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே இருப்பது உங்களுக்குத் தெரியும். அங்குதான் பயிற்சியாளர் தனது உள்ளீடுகளை அவருக்கு கொடுக்க முடியும்." என்று அவர் கூறினார்.
ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘முன்பெல்லாம் டீம் மேட்கள் நண்பர்களாக இருந்தார்கள். இப்போது நாங்கள் சக ஊழியர்களாக மட்டுமே இருக்கிறோம்’ என்று கூறியிருந்தார். இது அணியின் சூழலைப் பற்றி மிகவும் பாதிக்கூடியதாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் நம்புகிறார்.
"இது ஒரு சோகமான விஷயம், ஏனென்றால் விளையாட்டு முடிந்ததும் நீங்கள் ஒன்றாக கூடி, விளையாட்டைப் பற்றி பேசாமல் இசையைப் பற்றி பேசலாம், ஒருவேளை நீங்கள் விரும்பும் திரைப்படங்களைப் பற்றி பேசலாம், ஒருவேளை விண்வெளியில் உங்கள் ஆர்வத்தைப் பற்றி பேசலாம். ஆனால் அது நடக்கவில்லை என்றால், அது ஏமாற்றம்தான். 20 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு மேல் தொடங்கிய புதிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு அறை கிடைக்கிறது. அதுவும் ஒரு காரணியாக இருக்கலாம்." என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.
ஒரு வர்ணனையாளராக சுனில் கவாஸ்கர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்தியா விளையாடும் அனைத்து ஆட்டங்களுக்கும் மைதானத்தில் இருந்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் குறித்த எந்த ஆலோசனைக்கும் அவர் தயாராக இருந்துள்ளார். அவரை கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் யாராவது அணுகினார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இல்லை, யாரும் வரவில்லை. முன்பு ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ் லட்சுமண் ஆகியோர் என்னிடம் அடிக்கடி வந்து ஆலோசனை கேட்பர். அப்போது அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையுடன் என்னை அணுகுவார்கள். நான் அவர்களிடம் கவனித்ததை கூறுவேன்.
இதைப் பற்றி பேச எனக்கு ஈகோ இல்லை, நான் அவர்களிடம் சென்று பேசலாம். ஆனால், இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகிய இரண்டு பயிற்சியாளர்கள் உள்ளனர். எனவே, சில சமயங்களில் நான் அவர்களை அதிக தகவல்களை கொடுத்து குழப்ப விரும்பவில்லை என்பதால், நான் அதிலிருந்து பின்வாங்கியுள்ளேன்." என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.