Rohit Sharma | Sunil Gavaskar | India Vs Australia: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றில் இந்தியா அதன் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் இடது கை சீமர்களுக்கு (வேகப்பந்து வீச்சாளர்கள்) எதிராக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பலவீனம் குறித்த கிராஃபிக்கைப் பயன்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸைக் கடுமையாக சாடியுள்ளார்.
இடது கை சீமர்களுக்கு எதிராக ரோகித் சர்மாவுக்கு இருக்கும் பலவீனம் பற்றி பரவலாக அறியப்பட்டாலும், அவர் அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை வெளுத்து வாங்கி இருப்பார். குறிப்பாக ஸ்டார்க் வீசிய ஒரு ஓவரில் அவர் 29 ரன்கள் எடுத்து அசத்தி இருப்பார். இருப்பினும், 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த ரோகித் ஸ்டார்க் வீசிய பந்தில் போல்ட்-அவுட் ஆகியிருப்பார்.
ரோகித் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோகித்தின் ஆட்டமிழப்பு பற்றிய கிராபிக்ஸ் ஒன்றைப் போட்டது. இதனைப் பார்த்து எரிச்சலடைந்த கவாஸ்கர், "ரோகித் சர்மா மீண்டும் ஒருமுறை இடது கை வீரரிடம் (இடது கை சீமர்) ஆட்டமிழந்துள்ளார். இதனைப் பற்றி யோசிக்கும் போது, அடுத்த போட்டிக்கு முன், இடது கை வீரர்களுக்கு எதிராக அவரது பலவீனம் குறித்த மற்றொரு செக்மன்ட் செய்யப் போகிறோமா என்ன?" என்று கவாஸ்கர் கேட்டார்
அப்போது, வர்ணனையில் கவாஸ்கருக்கு அருகில் அமர்ந்திருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், ரோகித் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க்கிற்கு எதிராக மட்டுமின்றி, நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் மற்றும் பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடி போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படவில்லை என்பதை நியாயப்படுத்தினார்.
"இப்போது அதிகமான இடது கை வீரர்கள் விளையாடுகிறார்கள், அவர்கள் உண்மையான ஸ்விங் பந்துவீச்சாளர்கள். எனவே இது தொடக்க ஆட்டக்காரருக்கு (ரோகித் சர்மா) சவாலாக உள்ளது," என்று ஆரோன் ஃபின்ச் கிராஃபிக்கை நியாயப்படுத்த முயன்றார்.
அதற்கு பதிலடி கொடுத்து பேசிய கவாஸ்கர், "இது அவ்வளவு முக்கியமான் பிரச்சனை இல்லை" என்று கூறினார். "நீங்கள் அதைப் பற்றி அதிகம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பந்து ஸ்விங் இன் ஆகும்போது நீங்கள் அட்டாகிங் ஷாட்களை விளையாடினால், நீங்கள் எல்.பி.டபிள்யூ ஆகி அவுட் ஆவீர்கள். போல்ட் அவுட்-வும் ஆவீர்கள்," என்று கவாஸ்கர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“