Cricket news in tamil: மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) உறுப்பினர்களுக்கு வருகிற ஜூலை 29 அன்று நடக்கவுள்ள சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்தல், 70 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பதவியில் அமர்த்துவது மற்றும் அபேக்ஸ் கவுன்சில் சட்டத்தை தலைமை நிர்வாக அதிகாரிக்கு பதிலாக செயலாளர் நிறைவேற்றுவது உள்ளிட்ட முக்கிய உத்தேசிக்கப்பட்ட மாற்றங்களைப் பற்றி விவாதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மும்பை கிரிக்கெட் சங்கத்தில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார் உள்ளிட்ட பல இந்திய நட்சத்திர வீரர்கள் உறுப்பினர்களாக இருந்து வரும் நிலையில், அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை முழுவதும் பிரதிநிதித்துவப்படுத்திய சங்கத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற போவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கீழ் உள்ள ஒவ்வொரு மாநில சங்கமும் லோதா கமிட்டியின் பரிந்துரைகளின் மீது உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதன் அரசியலமைப்பை மாற்ற வேண்டியிருந்தது. லோதா கமிட்டி, அந்தந்த சங்கத்தில் உள்ள அனைத்து முன்னாள் சர்வதேச வீரர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. 70 வயதை எட்டிய பிறகு எந்தவொரு தனிநபரையும் பதவியில் வைத்திருப்பதைத் தடைசெய்தது. மேலும் நிர்வாகத்தை மேலும் தொழில்முறையாக மாற்றும் முயற்சியில், அந்தந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கியது.
மும்பை கிரிக்கெட் சங்கம் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தேச மாற்றங்கள் குறித்த அறிவிப்பில், எம்சிஏ அதன் உறுப்பினர்களாக கிளப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் சங்கத்தில் தனிப்பட்ட வாக்காளர் இல்லை என்று விளக்கியுள்ளது. அதற்குப் பதிலாக சர்வதேச வீரர்களை எந்த வாக்குரிமையும் இல்லாமல் இணை உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்றும் எம்சிஏ விரும்புவதாக தெரிவித்துள்ளது
"புரவலர் உறுப்பினர்கள், நன்கொடை உறுப்பினர்கள் போன்ற எந்தவொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும் வாக்குரிமை கிடையாது. மேலும் லோதா கமிட்டி சர்வதேச வீரர்களுக்கு சங்கத்தின் உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று மட்டுமே பரிந்துரை செய்தது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது விண்ணப்பதாரர் சங்கத்தின் அடித்தளத்தை மாற்றுவதாகும். இருப்பினும், சர்வதேச வீரர்கள் அசோசியேட் உறுப்பினர்களாக இருக்கலாம் மற்றும் அழைக்கப்படுவார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் பங்களிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவார்கள்" என்று எம்சிஏ-வின் முன்மொழிவு கூறுகிறது.
70 வயது வரம்பைப் பொறுத்தமட்டில், "தகுதியின்மை மிகவும் விரிவானது" என எம்சிஏ கருதுகிறது. மேலும் ஆளும் குழு உறுப்பினர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க எந்த காரணமும் இல்லை. போதுமான அனுபவம் இல்லாத நபர்கள் பிசிசிஐயில் அதன் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்திய கிரிக்கெட்டில் மும்பையின் பங்களிப்புக்கு அங்கீகாரம் இருக்காது. எம்சிஏவின் ன் நலன்களைப் பாதுகாப்பதற்காக, மற்ற உறுப்பினர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை மற்றும் தனிப்பட்ட தொடர்பு அனுபவம் உள்ளவர்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்றும் எம்சிஏ-வின் தெரிவித்துள்ளது.
“வயது அடிப்படையில் தகுதி நீக்கம் செய்வது நியாயமானதும் இல்லை, நடைமுறையும் இல்லை. 70 வயதைத் தாண்டியும் கிரிக்கெட் விளையாட்டிற்கு சேவையாற்றிய நிர்வாகிகளுக்கு பல உதாரணங்கள் உண்டு. 70 வயதிற்குப் பிறகும் சங்கத்திற்கு பங்களித்த நிர்வாகிகளின் சிறந்த தலைமைக்கு MCA அதன் வெற்றிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. எம்சிஏ அவர்களின் நிபுணத்துவத்தை ஆட்டம் இழக்கக் கூடாது என்று உறுதியாக உணர்கிறது,” என்று எம்சிஏ விளக்கம் கூறுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் பேசியது. அவர்கள் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யும் திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தனர். “அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஏனென்றால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஏதேனும் ஒரு சங்கம் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டுமானால், அவர்கள் முதலில் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்த பிறகுதான் சங்கம் இந்த மாற்றங்களைச் செய்ய முடியும்” என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.