Ms Dhoni | Sunil Gavaskar | Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் அரங்கேறும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளன.
இந்தப் போட்டியை ஒட்டி, நேற்று வெள்ளிக்கிழமை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை வந்தடைந்தது. இன்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஐ.பி.எல் கிரிக்கெட்டின் எல் கிளாசிகோ போட்டி என்பதால் இரு அணிகளின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை இப்போட்டி ஏற்படுத்தியுள்ளது. அதனால், இவ்விரு அணிகள் மோதும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சதேகமில்லை.
சி.எஸ்.கே கேப்டனாக தோனியின் தாக்கம் - சுனில் கவாஸ்கர் பேச்சு
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் எல் கிளாசிகோ போட்டிக்கு முன்னதாக, சி.எஸ்.கே அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனியின் தாக்கம் குறித்து பேசியுள்ளார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். மேலும், அவரது தலைமைப் பண்பு குறித்தும் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுனில் கவாஸ்கர், 'அதனால்தான் அவர் தல' (That's why they say, 'Thala for a reason') என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குறிப்பிடுவது பற்றிப் பேசினார். “பாருங்கள், வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வெவ்வேறு நகரங்களிலிருந்தும் வீரர்கள் இந்த் தொடரில் கலந்துகொள்கின்றனர். அவர்களை ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்திற்காக ஒன்றிணைக்க வேண்டும். இன்னும் 6 வாரங்களில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதற்காக, உங்களிடம் சில சிறந்த வீரர்கள் இருக்கலாம்.
மேலும் அணியின் ஆடும் லெவன் வீரர்கள் காரணமாக சில வீரர்களை வெளியே அமர வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். ஆனால் அவர்கள் பயனற்றவர்கள் என்று நீங்கள் அவர்களை உணர விடக் கூடாது. நீங்கள் அவர்களை அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக வைத்திருக்கிறீர்கள். இந்த திறன்களைக் கொண்டுள்ள வீரர் தான் எம்.எஸ் தோனி. அதனால்தான் அவரை 'தல' என ரசிகர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்." என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“