T20 World Cup 2024 | Sunil Gavaskar | Indian Cricket Team: 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 9 ஆம் தேதி அன்று நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதனிடையே, இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களை விட, இந்திய அணியில் அறிமுகமாகாத இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி அனைவரும் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள். தவிர, ஏற்கனவே இந்திய அணிக்கு அறிமுகமாகி தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த வீரர்களும் நடப்பு சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால், இவர்களில் எந்த வீரரை டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்ப்பது என்கிற குழப்பம் தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உலகக் கோப்பைக்கான அணியை அறிவிப்பதற்கான கடைசி தேதி மே 1 ஆகும். எனவே, ஏப்ரல் கடைசி வாரத்தில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஐ.சி.சி போன்ற பெரிய போட்டியைப் பொறுத்தவரையில், இறுதிப்போட்டி வரை அதிரடியாக முன்னேறி வரும் இந்திய அணி கடைசி நேரத்தில் சொதப்பி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழக்கும். இந்திய அணி இறுதியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியைத் தான் வென்றது. அதன்பின்னர் இந்திய ஒரு கோப்பை கூட வெல்லவில்லை. இந்த தேடலுக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவாஸ்கர் சூசகம்
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் இளம் வீரரை டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வாளர்கள் ஏற்கனவே கண்காணித்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸின் மிட் இன்னிங்ஸ் டிஸ்கஷனில் ரியான் பராக் பற்றி சுனில் கவாஸ்கர் பேசுகையில், "அவர் தேர்வுக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வரும் ஒருவர். எனவே, அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் போதும்" என்று கூறினார்.
ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் 48 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்தார். அத்துடன், நடப்பு சீசனில் அவர் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். பராக் தனது கடைசி 15 டி20 இன்னிங்ஸ்களில் 10 அரைசதங்களை (771 ரன்கள், சராசரி 90, 170.7 ஸ்ட்ரைக் ரேட்) விளாசியுள்ளார். எனவே, அவரை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடைசி 15 டி20 இன்னிங்ஸில் ரியான் பராக்:
45 (19), 61(34), 76*(37), 53*(29), 77(39), 72(36), 57*(33), 50*(31), 12(10), 8 (10), 43(29), 84*(45), 54*(39), 4(4), 76(48).
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“