Sunil Gavaskar | India vs England 3rd Test Rajkot: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 455 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 131 ரன்களையும், ஜடேஜா 112 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 62 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள், ரெஹன் அகமது 2 விக்கெட்டுகள், ஆண்டர்சன் , ஹார்ட்லி, ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இனிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களை எடுத்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 51 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது. அபாரமான சதம் விளாசிய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக ஓய்வுக்குச் சென்றார். கில் 65 ரன்னுடனும், குலதீப் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கையில் கருப்பு பட்டையுடன் இந்திய வீரர்கள்
இந்நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள். இந்த வார தொடக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடினார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/d898373f-9b9.jpg)
"சமீபத்தில் காலமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் நினைவாக, இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்" பி.சி.சி.ஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தத்தாஜிராவ் கெய்க்வாட் வயது தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். இவர் 1952 மற்றும் 1961 க்கு இடையில் இந்தியாவுக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், 1959 இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார்.
வலது கை ஆட்டக்காரரான அவர் 1952 இல் லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார் மற்றும் அவரது கடைசி சர்வதேச ஆட்டம் 1961 இல் சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக இருந்தது.
ரஞ்சி டிராபியில், கெய்க்வாட் 1947 முதல் 1961 வரை பரோடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் 14 சதங்கள் உட்பட 47.56 சராசரியில் 3,139 ரன்கள் எடுத்தார். 1959-60 சீசனில் மகாராஷ்டிராவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 249 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாகும். தத்தாஜிராவ் கெய்க்வாட் முன்னாள் இந்திய தொடக்க வீரரும், தேசிய அணி பயிற்சியாளருமான அவுன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தை ஆவார்
கவாஸ்கர் கடும் சாடல்
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தத்தாஜிராவ் கெய்க்வாட் நினைவாக இந்திய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு பட்டையை இந்த போட்டியின் முதல் நாள் அன்றே அணிந்திருக்க வேண்டும் என்று கூறி இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
"அவர்கள் (இந்திய அணி வீரர்கள்) அதனை முதல் நாளிலே செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மிகவும் தாமதமாக அணிந்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் அணியாமலே இருந்திருக்கலாம்" என்று சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“