Sunil Narine becomes first player to get a red card in CPL Tamil News: கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல் 2023) டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 12வது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் கிட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் செர்ஃபன் ரூத்தர்ஃபோர்ட் 62 ரன்களும், ஆண்ட்ரூ ஃபிளட்சர் 32 (17) ரன்களும் எடுத்தனர். டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 179 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 17.1 வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் 61 (32) ரன்கள் எடுத்தார். 5 சிக்சர்களை பறக்க விட்ட கேப்டன் பொல்லார்ட் 37* (16) ரன்களும், ஆண்ட்ரே ரசல் 23* (8) ரன்களும் எடுத்து வெறித்தனமான ஃபினிஷிங் கொடுத்தனர்.
சுனில் நரேனுக்கு ரெட் கார்டு
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதன் மூலம், கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) போட்டியில் ரெட் கார்டு பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
சி.பி.எல் அமைப்பாளர்கள், ஸ்லோ ஓவர் ரேட்டை எதிர்த்துப் போராடும் முயற்சியில், புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த விதியை மீறும் வீரருக்கு ரெட் கார்டு (சிவப்பு நிற அட்டை) வழங்கப்படுகிறது. ரெட் கார்டு பெறும் உடனடியாக களத்தை விட்டு வெளியேற வேண்டும்.
20வது ஓவர் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட 85 நிமிட நேரத்திற்குள் 19 ஓவர்களை வீசி முடிக்கும் அணிக்கு தண்டனையாக ஒரு வீரரை களத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு நடுவர் ரெட் கார்டை காண்பிப்பார். அப்போது பந்து வீசம் அணியின் கேப்டன் தனது அணியிலிருந்து யார் வெளியேற வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதோடு கடைசி ஓவரில் 30 யார்டு உள்வட்டத்திற்கு வெளியே 2 ஃபீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இதன்படி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி குறிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசாத நிலையில், கள நடுவர் ரெட் கார்டு கொடுத்தார். அதனால் கேப்டன் பொல்லார்ட் தனது அணியிலிருந்து சுனில் நரேன் களத்தை விட்டு வெளியேற சொன்னார். களத்தை விட்டு வெளியேறிய சுனில் நரேன் வெளியேறிய நிலையில், சி.பி.எல் டி20 தொடர் வரலாற்றில் ரெட் கார்டு வழங்கப்பட்டு களத்தில் இருந்து வெளியேறிய முதல் வீரர் ஆனார். தற்செயலாக, சுனில் நரேன் தனக்கு ஒதுக்கப்பட்ட 4 ஓவர்களையும் வீசி முடித்திருந்தார்.
இந்த பெனால்டி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி கேப்டன் கெய்ரோன் பொல்லார்ட், "உண்மையைச் சொல்வதானால், அனைவரும் செய்த கடின உழைப்பை இது பறிக்கும். நாங்கள் சிப்பாய்களைப் போன்றவர்கள், சொன்னதைச் செய்யப் போகிறோம்.
எங்களால் முடிந்தவரை வேகமாக விளையாடுவோம். இதுபோன்ற போட்டியில் 30-45 வினாடிகள் அபராதம் விதிக்கப்பட்டால், அது முற்றிலும் அபத்தமானது." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil“