சையத் முஷ்டாக் அலி டிராபி (எஸ்.எம்.ஏ.டி) போட்டியில் மேகாலயா அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக வெறும் 28 பந்துகளில் 100 ரன்களை விளாசி அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். இந்திய வீரர் ஒருவரின் டி20 போட்டிகளில் வேகமான சதத்தின் சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்தார்.
நிரஞ்சன் ஷா ஸ்டேடியம் சி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி (எஸ்.எம்.ஏ.டி) போட்டியில் மேகாலயா அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் ட்100 ரன்களை விளாசிய கேப்டன் அபிஷேக் சர்மா, இந்திய வீரர் ஒருவரின் அதிவேக டி20 சதம் என்ற சாதனையை சமன் செய்தார். 29 பந்துகளில் 106 ரன்களுடன், 11 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்த அபிஷேக், இந்த தொடரில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் திரிபுராவுக்கு எதிராக 28 பந்துகளில் சதம் விளாசிய குஜராத்தின் உர்வில் பட்டேலுடன், இந்திய வீரர்களின் அதிவேக டி20 சதத்தின் சாதனையை சமன் செய்தார். 143 என்ற எளிய இலக்கை துரத்திய அபிஷேக் சர்மா, 12 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்த 28 பந்துகளில் சதம் அடித்தார், இதன் மூலம் பஞ்சாப் அணி 9.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.
அபிஷேக் சர்மா இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம், அவர் இந்த தொடரில் ரன் குவிப்பதில் ஏற்பட்ட மந்தத்தை உடைத்துள்ளார். அவர் முந்தைய 6 இன்னிங்ஸ்களில் 149 ரன்கள் எடுத்தார், ஒரே ஒரு முறை அரை சதம் அடித்திருந்தார். இந்த சூழலில்தான், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அபிஷேக் சர்மா பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்துவீச்சிலும் தனது திறமையைக் காட்டினார். 4 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் என 24 விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், மேகாலயா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
உலகளவில், சைப்ரஸுக்கு எதிராக எஸ்டோனியாவின் சாஹில் சௌஹான் 27 பந்துகளில் அதிவேக டி20 சதம் அடித்துள்ளார். இதற்கு அடுத்து, அபிஷேக் சர்மா 28 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
ஐ.பி.எல் 2025 போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள அபிஷேக் சர்மா தனது அதிவேக சதத்தின் மூலம் உச்ச ஃபார்மில் இருக்கிறார் என்பதைக் காட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“