மும்பையில், கோவிட் -19 விதிமுறைகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் அமலுக்கு வந்த இந்த உத்தரவு ஜனவரி 5 வரை, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் இரவு 11 மணிக்குள் மூடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை மஹாய் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டிராகன்ஃபிளை கிளப்பில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் போலீசார் நடத்திய சோதனையில், முக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல், இருந்த விருந்தினர்கள், கிளப் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த 34 பேரில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாடகர் ரந்தாவா ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 188 பிரிவு (அரசால் அறிவிக்கப்பட்ட கடமைக்கு கீழ்ப்படியாமை) மற்றும் 269 (தொற்றுநோயை பரப்பக்கூடிய வகையில் செயல்படுகிறது) ஆகிய பிரிவுகளின் கீழ் ரெய்னாவை கைது செய்ததாகவும், பின்னர் அவர் ஜாமீன் பெற்றதால், உடனடியாக விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுரேஷ் ரெய்னா தரப்பில் வெளியான அறிக்கையில்,
மும்பையில் ஒரு படப்பிடிப்புக்காக வந்த "சுரேஷ் ரெய்னா, ஒரு நண்பரால், கிளப்புக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் உள்ளூர் விதிமுறை பற்றி தெரியாத ரெய்னா, அதிகாரிகள் சுட்டிக்காட்டியவுடன், உடனடியாக தனது தவறை ஒப்புக்கொண்டு, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். அரசால் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் சட்டங்களை மிக உயர்ந்த மரியாதையுடன் மதிக்கும் ரெய்னா, எதிர்காலத்தில் இந்த தவறை செய்யமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"