கிரிக்கெட் நட்சத்திரமான சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் கடந்த 2005ம் ஆண்டில் அறிமுகமானார். அதிரடி வீரராக அறியப்படும் ரெய்னா 3 ஃபார்மெட்டுகளிலும் 350 போட்டிகளுக்கு மேல் விளையாடி 7 ஆயிரம் ரன்களுக்கு மேலாக குவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வை அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தார்.
ஐபிஎல் தொடரில் ரெய்னா 205 போட்டிகளில் 5528 ரன்களை குவித்துள்ளார். எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி 5ல் 4 முறை அந்த அணி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியபோது முக்கிய வீரராக ரெய்னா இருந்தார். 2021 சீசனுக்குப் பிறகு ரெய்னா சென்னை அணியில் இடம் பிடிக்கவில்லை. தற்போது அவர் இந்தியா லெஜண்ட்ஸ், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் போன்ற ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் தொடரில் விளையாடி வருகிறார்.
ரெய்னா புகழாரம்
சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடாமல் இருந்தாலும், அவரது எண்ணம் சென்னை அணியுடன் எப்போதும் இருந்து வருகிறது. இந்நிலையில், ரெய்னா சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஜியோ சினிமாவுக்கான தனது சமீபத்திய நேர்காணலில், ரெய்னா எம்எஸ் தோனியை ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஒப்பிட்டுள்ளார். "அவர் தோனியைப் போன்றவர். ருதுராஜ் தனது கேப்டனைப் போலவே கூலாகவும் அமைதியாகவும் இருக்கிறார்,” என்று கூறியுள்ளார்.
இந்திய அணியில் ருத்து
புனேவைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் மிகப்பெரிய சொத்தாக இருந்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டில் சென்னை அணியில் அடியெடித்து வைத்த அவர் அந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தனது சிறந்த நுட்பம் மற்றும் மனோபாவம் கொண்ட ஒரு ஹிட்டர், பவர்-ஹிட்டிங்கை விட டெஃப்ட் ஸ்ட்ரோக் பிளே மூலம் விரைவாக ஸ்கோர் செய்து அசத்தி வருகிறார்.
2021 சீசனில் 635 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்திய அவர், சென்னையை அவர்களின் நான்காவது சாம்பியன்ஷிப்பிற்கு அழைத்துச் சென்றார். 2022 ஏலத்திற்கு முன்பு அவரை 6 கோடிக்கு சென்னை அணி தக்கவைத்துக்கொண்டது.
ஜூலை 2021ல், அவர் இலங்கைக்கு எதிரான தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடினார். ஜூன் 2022ல் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தனது முதல் அரை சதத்தை அடித்தார். 2021-22 விஜய் ஹசாரே டிராபி சீசனில் அவர் 400 ரன்களுக்கு மேல் எட்டினார். மேலும், ஒரே தொடரில் அதிக சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.
2023 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 15 போட்டிகளில் 564 ரன்கள் குவித்தார். குறிப்பாக, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான தொடக்கம் கொடுத்தார். குஜராத்தை வீழ்த்திய சென்னைய அணி 5வது முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
தற்போது மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரில் புனே அணியை கேப்டனாக ருதுராஜ் வழிநடத்தி வருகிறார். அவரை அந்த அணி நிர்வாகம் 14.8 கோடிக்கு வாங்கியது. அவர் மேற்கு மண்டல அணிக்காக ஜூன் 28 ஆம் தேதி தொடங்கும் துலீப் டிராபியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு, பிசிசிஐ மாற்றங்களைச் செய்ய அவசரப்படாது என்று கூறப்படுகிறது. இருப்பினும், ருதுராஜ் இந்திய அணியின் எதிர்கால திட்டத்தில் உள்ளார் என்றும் பிசிசிஐ-யின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.