கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமா எழுதியுள்ளார். “பிலீவ்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகம் தற்போது விற்பனையில் உள்ளது. இந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவராகவும் உள்ள சவுரவ் கங்குலியைப் பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

இதில் இந்திய அணியை கட்டமைத்ததில் சவுரவ் கங்குலிக்கு எந்தவித பங்கும் இல்லை என்று கூறியுள்ள ரெய்னா, கங்குலி ஒரு கேப்டனாக செயல்பட்டு அணியில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றும், அணியை கட்டமைத்தது உண்மையில் ராகுல் டிராவிட் தான் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், “சவுரவ் கங்குலி தலைமையில் பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தாலும், ராகுல் டிராவிட் தலைமையில் தான் அவர்கள் முதிர்ச்சியடைந்த வீரர்களாக உருவெடுத்தார்கள். இந்திய அணிக்காக விளையாடுவதை டிராவிட் எப்போதுமே ஒரு கௌரவாகமே நினைத்து வந்தார். அவரது தலைமையின் கீழ் விளையாடிய மஹேந்திர சிங் தோணி, முனாஃப் பட்டேல், யுவராஜ் சிங், இர்பான் பதான் போன்ற வீரர்களுக்கு அவர் ஊக்கமளித்ததால் தான் எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் மிகப்பெரிய வீரர்களாக திகழ்ந்தார்கள்” என்று அந்த புத்தகத்தில் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்தததில் முக்கிய பங்காற்றியதோடு, 2000ம் ஆண்டுகளில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்த இந்திய அணியை மீட்டது. இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கியது என பல வழிகளில் அணியின் தரத்தை உயர்த்த உழைத்திருந்தார் கங்குலி. இந்த நிலையில், கங்குலியை பற்றிய சுரேஷ் ரெய்னாவின் இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“